அரசின் நிதி முடக்கப்பட்டு 35 நாள்: சொந்த சாதனையை முறியடிக்கும் டொனால்ட் டிரம்ப்..!
Donald Trump breaks his own record after 35 days of government shutdown
அமெரிக்க அரசின் நிதி முடக்கப்பட்டு, 35 நாள் ஆகியுள்ளது. இந்நிலையில் ஊதியம் கிடைக்காததால், பல ஊழியர்கள் கட்டாய விடுப்பில் சென்றுள்ளனர். இதன் காரணமாக ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அமெரிக்காவில் முக்கிய துறைகளின் சேவை ஸ்தம்பித்து போயுள்ளது.
கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், பல்வேறு அதிரடிகளை காட்டி வருகிறார். உலக நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பு, குடியேற்றச் சட்டத்தில் கடுமை, 'எச்1பி' விசாவில் கெடுபிடி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தொடர்ந்து, அமெரிக்காவுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

அத்துடன், அடுத்த நிதியாண்டுக்கு தேவையான நிதியை விடுவிப்பதில் பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நிதி விடுவிப்பு தடைபட்டுள்ளது. இதனையடுத்து, அரசின் முக்கிய துறைகள் அனைத்தும் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் பணியாளர்கள் ஊதியமின்றி பணியாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பல ஊழியர்கள் கட்டாய விடுப்பில் சென்றதால், அத்தியாவசிய சேவைகளும் ஸ்தம்பித்துள்ளன. கடந்த அக்டோபர் 01 முதல், தொடங்கிய நிதி முடக்கம் இன்று 35வது நாளை எட்டியுள்ளது. இதனால் அமெரிக்க அரசு துறைகளுக்கு செலவழிக்க பணம் வழங்கப்படவில்லை. இதேபோன்று கடந்த 2018 - 2019-இல் டிரம்பின் முந்தைய ஆட்சியிலும் இதுபோல் 35 நாட்களுக்கு நிதி முடக்கம் ஏற்பட்டது.

தற்போதைய நிலையில் தீர்வுக்கு உடனடி வாய்ப்பு இல்லாததால், தன் சொந்த சாதனையை டிரம்ப் முறியடிக்கவுள்ளார். அரசின் பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விமான சேவைகளும் முடங்கியுள்ளது. கடந்த வார இறுதி நாட்களில் மட்டும் 16,700 விமானங்கள் தாமதமானதாகவும், 2,282 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு அமெரிக்காவில் நிதி முடக்கத்தால் 6.70 லட்சம் அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் உள்ளதாகவும், 7.30 லட்சம் பேர் ஊதியமின்றி பணிபுரிந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Donald Trump breaks his own record after 35 days of government shutdown