''பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தி வரும் சேலம் அருளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்''; வழக்கறிஞர் கே.பாலு கோரிக்கை..! - Seithipunal
Seithipunal


''பொது அமைதிக்கு தொடர்ந்து பங்கம் ஏற்படுத்தி வரும் சேலம் அருளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” பாமக செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞர் கேபாலு வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''சேலம் மாவட்டம் வடுகத்தம்பட்டியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்களை சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் தலைமையிலான கும்பல் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதுடன், மகிழுந்தை மோதி படுகொலை செய்ய முயன்றுள்ளது. காவல் துறையினர் முன்னிலையிலேயே இந்த காட்டுமிராண்டித்தனத்தை அரங்கேற்றிய அருள் தலைமையிலான கும்பல் மீது காவல் துறையினர் இதுவரை நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த ஏத்தாப்பூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வடுக்கத்தப்பட்டி மந்தைக்குட்டையில் பாமக நிர்வாகி ஒருவரின் தந்தை காலமான நிலையில், அவரது உடலுக்கு மரியாதை செலுத்த சேலம் அருளும் அவரது கூட்டாளிகளும் அங்கு சென்றுள்ளனர். அப்போது பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான கொட்டைப் பாக்கு காயவைக்கும் களத்தில் அருளும், அவரது கூட்டாளிகளும் அனுமதியின்றி மகிழுந்தை நிறுத்தியுள்ளனர். இதில் அங்கு காயவைக்கப்பட்டிருந்த பாக்குகள் சேதமடைந்ததால், வாகனங்களை அங்கு நிறுத்தக் கூடாது என்று ராஜேஷ்குமார் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

அதைக் கேட்ட சேலம் அருள், ராஜேஷ்குமாரைத் தாக்கும்படி தன்னுடன் வந்த கும்பலை தூண்டியுள்ளார். அப்போது அங்கு இருந்த காவல் துறையினர், அருள் கும்பலைத் தடுப்பதற்கு பதிலாக ராஜேஷ்குமாரை தடுத்து தங்களுடன் அழைத்துச் சென்றுள்ளனர். காவல் துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும்போதே, மாற்றுத் திறனாளி என்றும் பாராமல் ராஜேஷ்குமாரை சேலம் அருள் கும்பல் தாக்கியுள்ளது.

இது குறித்த தகவல் கிடைத்தவுடன் ராஜேஷ்குமாரை மீட்டு மருத்துவம் அளிப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் அங்கு விரைந்துள்ளனர். அப்போது அங்கிருந்து சேலம் சென்று கொண்டிருந்த அருள் கும்பல், வடுக்கத்தம்பட்டி தரைப்பாலம் என்ற இடத்தில் செந்தில் குமார் என்பவர் மீது மகிழுந்தை மோதி படுகொலை செய்ய முயன்றுள்ளது.

அதில் படுகாயம் அடைந்த செந்தில் குமார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கொடிய ஆயுதங்களுடன் அருள் கும்பல் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் வஜ்ரா காசி உள்ளிட்ட மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பெறுகின்றனர்.

பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து கடந்த ஜூலை மாதம் நீக்கப்பட்ட சேலம் அருள், அப்போதிலிருந்தே பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது தாக்குதல் நடத்துவது, வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுவது, பொது அமைதியை குலைப்பது, வன்முறையைத் தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

இதைத் தடுக்க காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சேலம் அருள், கட்சிக் கொடியையோ, பெயரையோ பயன்படுத்தக் கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையிடமும் புகார் அளித்துள்ளது. ஆனால், அதன் மீது இன்று வரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கும்பகோணத்தில் கடந்த ஒன்றாம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்ற அருள், அதற்கு முதல் நாள் அவருடைய முகநூலில் கும்பகோணத்தில் பாமக தலைமை மீது அவதூறு பரப்பப் போவதாக பதிவிட்டார். அதனால் பதட்டம் ஏற்பட்ட நிலையில், சேலம் அருளை தஞ்சை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் எச்சரித்ததால் அவ்வாறு பேசுவதை கைவிட்டார்.

சேலம் அருள் கடந்த சில வாரங்களாகவே எங்கு சென்றாலும் வன்முறையைத் தூண்டும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இன்று கூட வடுக்கத்தம்பட்டி மந்தைகுட்டையில் மாற்றுத்திறனாளி ராஜேஷ்குமாரை தாக்கியதற்காக சேலம் அருளையும், அவரது கும்பலையும் காவல்துறை கைது செய்திருந்தால் அடுத்தடுத்த வன்முறைகளில் அந்தக் கும்பல் ஈடுபட்டிருப்பது தவிர்க்கப்பட்டிருக்கும்.

பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது சேலம் அருள் உள்ளிட்ட கும்பல்கள் கட்டவிழ்த்து விடும் வன்முறை வெறியாட்டங்களை தமிழக அரசும், காவல்துறையும் அரசியல் காரணங்களுக்காக வேடிக்கைப் பார்க்கின்றன. கடந்த சில நாள்களுக்கு முன் செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளர் முன்னிலையில் பாமக நிர்வாகி வினோத் என்பவரை ஒரு கும்பல் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளது.

வடுக்கத்தம்பட்டியில் இரு இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது சேலம் அருள் தலைமையிலான வன்முறை கும்பல் நடத்திய தாக்குதல்களும் காவல்துறையினர் முன்னிலையில் தான் நடந்துள்ளன. வன்முறை நிகழ்வுகளை தடுக்க வேண்டிய காவல்துறையினரே வன்முறை கும்பலுக்கு ஆதரவாக செயல்படக் கூடாது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய பெரும் பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது. அந்தக் கடமையிலிருந்து காவல்துறை தவறக் கூடாது. அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில், தொடர்ச்சியாக வன்முறை வெறியாட்டங்களை நடத்தி வரும் சேலம் அருளையும், அவரது கூட்டாளிகளையும் காவல் துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். பொது அமைதிக்கு தொடர்ந்து பங்கம் ஏற்படுத்தி வரும் சேலம் அருளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lawyer K Balu requests that action be taken to imprison Salem Arula under the Goondas Act for disturbing public peace


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->