ஹார்முஸ் நீரிணைக்கு பதிலாக ‘பாப்’ ஜலசந்தியை தேர்வு செய்த சவுதி; கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஹவுதி அமைப்பு: கச்சா எண்ணெய் 150 டாலராக உயர்வு..?
Crude oil prices rose to 150 dollar following an attack by the Houthi group on a ship passing through the Bab el Mandeb Strait
ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்ட தொடர்ச்சியான தடங்கல்கள் மற்றும் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஹார்முஸ் நீரிணையை இரா முடக்கியுள்ளதால் உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பெரிதும் தடைப்பட்டுள்ளது.
இதன்காரணமாக ஹார்முஸ் ஜலசந்திக்கு பதிலாக சவுதி அரேபியா தனது கச்சா எண்ணெய் விநியோகத்திற்காக மாற்றுப் பாதையாக ‘பாப்’ ஜலசந்தியை தேர்ந்தெடுத்தது. இதற்காக செங்கடல் பகுதியில் அமைந்துள்ள யான்பு துறைமுகத்திற்கு எண்ணெயைக் கொண்டு செல்லும் பணிகளை சவுதி அரேபியா தீவிரப்படுத்தியது.
இதன் விளைவாக, தினசரி 4.6 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இந்த மாற்றுப் பாதை வழியாக கொண்டு செல்லப்பட்டது. இது முந்தைய அளவை விட மூன்று மடங்கு அதிகமாகும். ஆனால், ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்பினர் தற்போது பாப் அல்-மாண்டேப் ஜலசந்திக்கு நேரடி அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டது போல இந்தப் பாதையும் முடக்கப்பட்டால், உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்வதற்கான ஒரே மாற்று வழியும் அடைக்கப்படும் சூழல் உருவாகும்.

துபாய் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த குவைத் நாட்டுக்குச் சொந்தமான 'அல்சல்மி' என்ற கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் அந்தக் கப்பலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அத்துடன், சவுதி அரேபியாவின் ராஸ் தனுரா அருகே சென்ற கிரீஸ் நாட்டுக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்றின் மீது ஏவுகணைகள் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தாக்குதல்கள் காரணமாக 'பிரெண்ட்' கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 110 முதல் 115 டாலர் வரை உயர்ந்துள்ளது.தாக்குதல்கள் காரணமாக பாப் அல்-மாண்டேப் வழித்தடம் முழுமையாக முடக்கப்பட்டால், எண்ணெய் விலை 150 டாலரைத் தாண்டும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

மிக முக்கியமாக ஆசிய நாடுகள் தங்களுக்குத் தேவையான 60 சதவீத எண்ணெய்க்கு மத்திய கிழக்கு நாடுகளையே நம்பியுள்ளன. இதனால் பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிசக்தி அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போன்று தென்கொரியா தனது குடிமக்களை எரிசக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்த வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவில் பெட்ரோல் விலை ஒரு கேலன் 04 டாலரைத் தாண்டியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் நாடுகள் வான்வழித் தாக்குதல்களால் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளன. இந்த சூழலில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு உலகை அச்சுறுத்த தொடங்கியுள்ளது.
English Summary
Crude oil prices rose to 150 dollar following an attack by the Houthi group on a ship passing through the Bab el Mandeb Strait