உதவி பேராசிரியர் தேர்வில் குளறுபடியா...? - தேர்வு முடிவுகளை ரத்து செய்யக் கோரிய எடப்பாடி பழனிசாமி
Was there any irregularities Assistant Professor exam Edappadi Palaniswami demands cancellation exam results
அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளைச் சுற்றி எழுந்துள்ள முறைகேடு குற்றச்சாட்டுகள் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி, தகுதியானவர்களுக்கு மட்டுமே பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக இருந்த 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த தேர்வில் மொத்தம் 42,064 பேர் பங்கேற்றதாகவும் தெரிவித்துள்ளார்.தமிழ் மொழித் தேர்வைத் தவிர, 150 மதிப்பெண்களுக்கு பாடம் சார்ந்த புறநிலை வினாத்தாள் மற்றும் 50 மதிப்பெண்களுக்கு விளக்கக் கட்டுரைத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் வெளியானதும், குறிப்பாக கட்டுரைத் தாளின் மதிப்பீட்டில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் வெடித்துள்ளன.புறநிலை வினாத்தாளில் அதிக மதிப்பெண் பெற்ற பலர், கட்டுரைத் தாளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
42 தேர்வர்கள் பூஜ்ஜிய மதிப்பெண்ணும், 106 பேர் வெறும் ஒரு மதிப்பெண்ணும் பெற்றுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.குறிப்பாக, தமிழ் பிரிவில் புறநிலை வினாத்தாளில் 150-க்கு 111 மதிப்பெண் பெற்ற தேர்வருக்கு கட்டுரைத் தாளில் பூஜ்ஜிய மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு நேர்மாறாக, புறநிலை வினாத்தாளில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற சிலருக்கு கட்டுரைத் தாளில் 50-க்கு 49 வரை மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதும், இறுதி தரவரிசையை மாற்றியமைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.“100-க்கு மேல் மதிப்பெண் பெறும் ஒருவர் கட்டுரைத் தாளில் பூஜ்ஜியம் பெறுவது எப்படி? அல்லது குறைந்த மதிப்பெண் பெற்றவர் கட்டுரையில் உச்ச மதிப்பெண் பெறுவது எப்படி?” என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
இது மதிப்பீட்டு முறையின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்குகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பல ஆண்டுகளாக வேலைவாய்ப்புக்காக காத்திருந்த இளைஞர்களின் எதிர்காலம் இந்த மதிப்பீட்டு முறைகேடுகளால் சிக்கலில் சிக்கியுள்ளதாகவும், தேர்வர்களின் கனவுகளுடன் ஆசிரியர் தேர்வு வாரியம் விளையாடக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும், கட்டுரைத் தாளுக்கான மதிப்பீட்டு அளவுகோல்கள், மாதிரி விடைகள் மற்றும் மதிப்பெண் வழங்கிய நடைமுறைகள் அனைத்தும் வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும் என்றும், உடனடியாக மறுமதிப்பீடு நடத்தப்பட வேண்டும் என்றும் தேர்வர்கள் கோரிக்கை விடுத்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த சில ஆண்டுகளாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் நிரப்பப்படாமல், பொறுப்பு முதல்வர்கள் மூலமே நிர்வாகம் நடைபெற்று வருவதாகவும், 50 சதவீதத்திற்கும் அதிகமான உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் கற்பித்தல் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் விளைவாக, மாணவர்கள் அரசு கல்லூரிகளை விட்டு தனியார் கல்வி நிறுவனங்களை நாடும் நிலை உருவாகியுள்ளதாகவும், உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதமும் சரிவை சந்தித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும், புதிய ஆட்சி பொறுப்பேற்ற பிறகும் மாணவர் சேர்க்கை தொடர்பாக தெளிவான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும், 12-ம் வகுப்பு முடிவுகள் வெளியாகி 60 நாட்கள் கடந்தும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 45 சதவீத இடங்கள் காலியாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வருங்கால தலைமுறைக்கு கல்வி கற்பிக்க வேண்டிய உதவிப் பேராசிரியர் தேர்விலேயே இத்தகைய முறைகேடுகள் நடந்தால், அது கல்வித்துறையின் தரத்தையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் கடுமையாக பாதிக்கும் என எச்சரித்தார்.
இறுதியாக, தற்போதைய தேர்வு முடிவுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், சுதந்திரமான முழுமையான விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விசாரணை நிறைவடையும் வரை அனைத்து ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Was there any irregularities Assistant Professor exam Edappadi Palaniswami demands cancellation exam results