டெல்லி பிரதிநிதியாக கே.வெங்கட நாராயாணா நியமனம்; ''அது அவர்கள் கட்சி விவகாரம் ''; திருமாவளவன் பேட்டி..!
Thirumavalavan says K Venkata Narayanas appointment as Delhi representative is a party matter
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கே.வெங்கட நாராயாணா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பொறுப்பேற்கும் தேதியில் இருந்து ஓராண்டு காலத்துக்கு இந்த நியமனம் அமலில் இருக்கும் என்று அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிற அரசியல் கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'ஜனநாயகன்' படத் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளமை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்து பேசும் போது திருமாவளவன் கூறியதாவது; ''அதற்கு அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்; வெங்கட நாராயணா முதல்வரின் நம்பிக்கைக்கு உரியவர்; அதனால் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அந்தப் பொறுப்பு ஆட்சி நிர்வாகத்தில் முக்கியமான முடிவு எடுக்கும் பொறுப்பல்ல. ஆகவே அந்தப் பொறுப்பை முதலமைச்சர் தன்னுடைய நம்பிக்கைக்குரிய தோழருக்கு கொடுத்துள்ளதாக விளக்கம் அளித்திருக்கிறார்'' என்று பதிலளித்தார்.

அதற்கும் செய்தியாளர்கள் ''அந்த விளக்கம் உங்களுக்கு ஏற்புடையதா?'' என்று கேள்வி எழுப்பினர். அப்போது ''அது அவர்கள் கட்சி விவகாரம்; அரசுப் பதவிதான் என்றாலும்கூட அந்த அதிகாரம் முதலமைச்சருக்கு இருக்கிறது; இதனால் எந்தப் பாதிப்பும் நேரப்போவதில்லை என்ற கருத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்" என்று திருமாவளவன் பதிலளித்துள்ளார்.
மேலும், மதிமுக எம்.எல்.ஏக்களை விஜய் ராஜினாமா செய்ய சொல்லியிருக்கிறாரே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு ''அதுபற்றிக் கருத்து கூற விரும்பவில்லை'' என்று திருமா பதிலளித்துள்ளார்.
English Summary
Thirumavalavan says K Venkata Narayanas appointment as Delhi representative is a party matter