'மைதானங்களிலும் பெண்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்'..! - விளையாட்டு வீராங்கனைகளின் பாதுகாப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் எழுப்பியுள்ள முக்கியக் கேள்வி
Women need protection stadiums too Makkal Needhi Maiyam raises key question regarding safety female athletes
தமிழகத்தில் விளையாட்டு துறையில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பு மீண்டும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், வீராங்கனைகளுக்கான பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் விளையாட்டு மேம்பாட்டு அணி மாநிலச் செயலாளர் அரவிந்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கபடி வீராங்கனை ஒருவர் பயிற்சியாளர் மூலம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வெளியாகியுள்ள தகவல் கடும் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் விளையாட்டு துறையினரிடையே மட்டுமல்லாமல், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் பாதுகாப்பு குறித்த பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த விவகாரத்தில் உடனடி மற்றும் விரிவான விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட வீராங்கனைக்கு உரிய நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பெண்கள் மற்றும் சிறுமிகள் அச்சமின்றி, பாதுகாப்பாகவும், மரியாதையுடனும் பயிற்சி பெறக்கூடிய சூழலை உருவாக்குவது அரசு மற்றும் விளையாட்டு அமைப்புகளின் அடிப்படை பொறுப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.அரசு மற்றும் தனியார் விளையாட்டு அகாடமிகள், பயிற்சி மையங்கள் மற்றும் விளையாட்டு விடுதிகளில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த பாதுகாப்பு கொள்கையை கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் புகார்களை பதிவு செய்து விசாரிக்க தனிப்பட்ட கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அளிக்கும் புகார்கள் மீது தாமதமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.புகார் அளிப்பவர்களின் அடையாளம் மற்றும் தகவல்கள் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அனைத்து பயிற்சியாளர்களின் பின்னணி விவரங்கள் முறையாக ஆய்வு செய்யப்பட வேண்டும். அதோடு, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஒழுக்கம், பாதுகாப்பு மற்றும் பொறுப்புணர்வு தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்ட வீரர், வீராங்கனைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். பெற்றோர் தொடர்பு நடைமுறை மற்றும் பயிற்சி கண்காணிப்பு அமைப்புகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து பயிற்சி மையங்களிலும் பொதுப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். வருகைப் பதிவு மற்றும் கண்காணிப்பு நடைமுறைகள் கட்டாயமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரத்தில், வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் தனியுரிமை எந்த நிலையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஆண்டுதோறும் பாலியல் தொந்தரவு தடுப்பு, குழந்தைகள் பாதுகாப்பு, தொழில்முறை ஒழுக்கம் மற்றும் சட்ட விழிப்புணர்வு தொடர்பான பயிற்சிகள் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் என அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Women need protection stadiums too Makkal Needhi Maiyam raises key question regarding safety female athletes