'டான்ஸ் மட்டும்தான் ஆடவில்லை'...! - சட்டசபை குறித்து முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்...!
I didnt just dance Udhayanidhi Stalin grilled Chief Minister Vijay regarding assembly
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நடைபெற்ற திருமண விழா மேடை அரசியல் விமர்சன மேடையாக மாறிய நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.தஞ்சை மத்திய மாவட்ட அயலக அணி தலைவர் க.முத்து தமிழ்ச்செல்வன் இல்ல திருமண விழாவில் பங்கேற்று பேசிய அவர், தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் சட்டமன்ற நடவடிக்கைகள் குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

அப்போது அவர் பேசுகையில், “தமிழக சட்டமன்றம் தற்போது ஜனநாயக விவாத மேடையாக இல்லாமல், சினிமா படப்பிடிப்பு தளமாக மாறிவிட்டது. சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் டான்ஸ் ஆடுவது மட்டும்தான் பாக்கி. அடுத்த கூட்டத்தொடரில் அதையும் பார்க்க நேரிடலாம் என்று நினைக்கிறேன்” என கடுமையாக விமர்சித்தார்.
மேலும், தமிழக சட்டமன்றத்தின் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாக குற்றம்சாட்டிய அவர், “மின்சாரம் எங்கே? சட்டம்-ஒழுங்கு எங்கே? என்று தமிழ்நாடு முழுவதும் மக்கள் தேடி அலைகின்றனர். சட்டம்-ஒழுங்கு உட்பட பல முக்கிய பிரச்சினைகள் குறித்து சட்டமன்றத்தில் நாங்கள் கேள்வி எழுப்பினோம்.
ஆனால் முதல்-அமைச்சரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை” என்றார்.இதைத் தொடர்ந்து, “இந்த ஆட்சியால் உருவான சிக்கல்களில் இருந்து தமிழ்நாட்டை பாதுகாப்பது நமது மிகப்பெரிய பொறுப்பு” எனவும் தெரிவித்தார்.“சோபா மாடல் ஆட்சி” என விமர்சித்த அவர், “இந்த ஆட்சியின் போலி பிம்பம் தற்போது முற்றிலும் சிதறி விழுந்துள்ளது. தினமும் இந்த அரசின் உண்மை முகத்தை மக்கள் தெளிவாக புரிந்து கொண்டு வருகின்றனர்” என்று கூறினார்.
இளைஞர்கள் இந்த அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து கேள்விக்குட்படுத்தி வருவதாக குறிப்பிட்ட அவர், “ஆட்சியின் தவறுகளை தட்டிக் கேட்கும் இளைஞர்களை அடக்குமுறையால் ஒடுக்க முயற்சி செய்கிறது இந்த அரசு. கேள்வி கேட்டாலே கைது செய்வது ஜனநாயகத்திற்கு நல்ல அறிகுறி அல்ல” என குற்றம்சாட்டினார்.
இதுபோன்ற சூழ்நிலைகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ள கழகத்திற்கு திறமையான வழக்கறிஞர்கள் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.மேலும், “நம்மை விமர்சிக்கிறோம் என்று நினைத்து முதல்-அமைச்சரே தன்னைத் தானே வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார். தூய சக்தி என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், பதவியேற்ற உடனேயே குதிரை பேர அரசியலில் இறங்கினர்” என கடுமையாக சாடினார்.
மேலும், விவசாயிகள் போராட்டம் குறித்து பேசும்போது, “விவசாயிகள் போராட்டத்திற்கு திமுகதான் காரணம் என முதல்-அமைச்சர் கூறி அவர்களை கொச்சைப்படுத்துகிறார். எந்த பிரச்சினை வந்தாலும் அதற்கு திமுகதான் காரணம் என்ற ஒரே பதிலை தயார் செய்து வைத்திருக்கிறார்” என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார்.
English Summary
I didnt just dance Udhayanidhi Stalin grilled Chief Minister Vijay regarding assembly