உக்கிர நிலையில் 'எல் நினோ'; வெப்ப அலை தாக்கத்தினால் கடும் சுகாதார நெருக்கடியை சந்திக்க போகும் உலக நாடுகள்..!
Countries around the world are going to face a severe health crisis due to the impact of the heat wave
எல் நினோ (El Niño) என்பது வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியில் ஏற்படும் இயற்கையான வெப்பமடைதல் நிகழ்வாகும். இது உலகம் முழுவதும் வானிலை அமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது. இது பருவநிலை மாற்றத்துக்கான காரணம் இல்லாவிட்டாலும், புவி வெப்பமடைதல் நிகழ்வை அதிகரிக்க செய்யும்.
பூமி ஏற்கனவே, பசுமை இல்ல வாயுக்களால் (green house gases) வெப்பமடைந்துள்ள சூழலில், இந்த எல் நினோ உருவாகும் போது உலகளாவிய வெப்பநிலை மற்றும் பிராந்திய அளவிலான தீவிர வானிலை நிகழ்வுகளை இது மேலும் உக்கிரமடையச் செய்யும்.
அதாவது, மனித நடவடிக்கைகளால் ஏற்படும் புவி வெப்பமடைதல், மிக அதிக வெப்பமான பெருங்கடல்கள், வறண்ட நிலப்பரப்புகள், மெதுவாக நகரும் உயர் அழுத்த வானிலை அமைப்புகள் மற்றும் வெப்பமண்டல பசிபிக் பகுதியில் தற்போது உருவாகியுள்ள 'எல் நினோ' ஆனது, சூழல் ஆகிய காரணிகள் அனைத்தும் ஒரே சமயத்தில் ஒருங்கிணைந்து இயங்குவதால் கண்டங்கள் முழுவதும் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அறிவியல் சான்றுகளின் படி, பசுமை இல்ல வாயுக்கள் (Green house gases) அதிகரித்திருப்பதால், உலகின் அடிப்படை வெப்பநிலையே உயர்ந்துள்ளது. இதனால் வெப்ப அலைகள் (Heatwaves) முன்பைவிட அதிக வெப்பமான நிலையை அடித்தளமாகக் கொண்டு வீசத் தொடங்கியுள்ளன.
குறிப்பாக கடல்களின் மேற்பரப்பு நீரின் வெப்ப அதிகரிப்பும் பருவநிலை அமைப்பில் கூடுதல் மாற்றங்களைக் கொண்டு வருகிறது. நிலம் வறண்டு இருந்தால் வெப்பம் இன்னும் தீவிரமடைகிறது. ஏனெனில், சூரியனின் ஆற்றலில் குறைவான பகுதி மட்டுமே மண்ணிலும் தாவரங்களிலும் உள்ள நீரை ஆவியாக்க பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள ஆற்றல் காற்றை மேலும் சூடேற்றுகிறது.
ஆக, இந்த வெப்பம் எந்தப் பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை வானிலைச் சுழற்சிகளே தீர்மானிக்கின்றன. ஓர் High-pressure system ஒரு பகுதியில் நீண்ட நேரம் நிலைத்திருக்கும்போது Heat Dome உருவாகிறது. அப்போது காற்று கீழ்நோக்கி அழுத்தப்படுகிறது. மேகங்கள் உருவாகுவது தடுக்கப்படுகிறது. இதன் விளைவாக வெப்பநிலை பல நாட்கள் தொடர்ந்து உயர்கிறது.

மேலும், இரவு நேரங்களிலும் வெப்பம் குறையாமல் நீடித்தால் ஆபத்து பல மடங்கு அதிகரிக்கிறது. மனித உடல், கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு குளிர்ச்சியடைய போதிய இடைவெளி கிடைக்காததால், வெப்பத்தின் தாக்கம் தீவிரமாகிறது.
தற்போது உலாகி நாடுகளை பொறுத்தமட்டில் இங்கிலாந்தில், மே மாத இறுதியில் Kew Gardens பகுதியில் வெப்பநிலை 35.1°C-ஐ எட்டியது. இதன்மூலம், தொடர்ந்து இரண்டாவது நாளாக மே மாதத்துக்கான தேசிய வெப்பநிலைச் சாதனை தற்காலிகமாக முறியடிக்கப்பட்டது. 2026-ஆம் ஆண்டின் இந்த வெப்ப அலைக்கு முன், மே மாதத்தின் முந்தைய அதிகபட்ச சாதனை 32.8°C ஆக இருந்தது; அது 1922 மற்றும் 1944 ஆண்டுகளில் பதிவாகியிருந்தது.

இதே போக்கு உலகின் பிற பகுதிகளிலும் தென்படுகிறது. அதிலும் பிரான்சில், 1900-ஆம் ஆண்டு முதல் பதிவுகள் தொடங்கியதில் இருந்து 2026-ஆம் ஆண்டின் வசந்த காலம், இதுவரை பதிவானவற்றில் மிக அதிக வெப்பமான வசந்த காலமாக அமைந்தது. அடுத்து, அமெரிக்காவில், தொடர்ச்சியாக இணைந்துள்ள 48 மாநிலங்களிலும் 2026 மார்ச் மாதம், வரலாற்றில் பதிவான மிக அதிக வெப்பமான மார்ச் மாதமாக இருந்துள்ளது.
நம் நாட்டில் (இந்தியா) வடக்கு, மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் ஜூலை தொடக்கம் வரை வெப்ப அலை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) நீட்டிக்கப்பட்ட எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
அத்துடன், சீனாவின் தேசிய காலநிலை மையம், குறிப்பாக தென் சீனா மற்றும் வடமேற்கிலுள்ள சின்ஜியாங் பகுதிகளில், இந்த கோடையில் இயல்பை விட அதிக வெப்பநிலை பதிவாகும் என்றும் கணித்துள்ளது.

இதேப்போன்று, ஆஸ்திரேலியாவில் டாஸ்மேனியா, விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்கள், இதுவரை பதிவான 10 மிக அதிக வெப்பமான இலையுதிர் காலங்களில் ஒன்றை அண்மையில் அனுபவித்துள்ளன.
இந்த கடும் வெப்ப அலை வெயில் காரணமாக நிகழும் பல மரணங்கள் 'வெயில்' என்ற பெயரில் பதிவாகாமலே போகும். ஏற்கெனவே இருந்த நோய்களை அது தீவிரப்படுத்தி, மரணத்தின் மறைமுகக் காரணமாக மாறிவிடுகிறது. அதனால் வெப்பத்தின் உண்மையான பலி எண்ணிக்கை கணக்குகளில் தெரிவதை விட அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அளவுக்கு அதிகமான வெயில் என்பது வெறும் பருவநிலை கோளாறு மட்டும் அல்ல; அது மனித உடலையும், சமூகத்தின் உயிர்நாடிகளையும் மெதுவாகச் சோதிக்கும் ஓர் அமைதியான பேரிடர் ஆகும். இதனால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் வெளிப்புறங்களில் வேலை செய்பவர்கள் உடலில் நீர்ச்சத்து இழப்பு, கடுமையான சோர்வு, ஹீட் ஸ்ட்ரோக் (Heatstroke) போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர்.
English Summary
Countries around the world are going to face a severe health crisis due to the impact of the heat wave