வெனிசுலா அதிபர் கைது; 'இறையாண்மையை கடுமையாக மீறும் செயல்'; அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீனா மற்றும் வட கொரியா..!
China has condemned the United States stating that the arrest of the Venezuelan president is a serious violation of sovereignty
தென் அமெரிக்க நாடான வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரசை, அமெரிக்க ராணுவம் நேற்று முன்தினம் அதிகாலை கைது செய்து நியூயார்க் சிறையில் அடைந்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் கடத்தலுக்கு ஆதரவளித்தல், ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை மதுரோ மீது அமெரிக்கா சுமத்தியுள்ளது.
வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், லத்தீன் அமெரிக்க விவகாரங்களுக்கான சீனாவின் சிறப்பு பிரதிநிதி கியூ சியாவோகி, வெனிசுலா அதிபர் மதுரோவை சந்தித்து பேசி இருந்தார். இந்நிலையில், மதுரோ மற்றும் அவரது மனைவி கைதுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்து, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
''அமெரிக்காவின் இத்தகைய மேலாதிக்க நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தையும், வெனிசுலாவின் இறையாண்மையையும் கடுமையாக மீறும் செயல். சர்வதேச சட்டங்களுக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கும் கட்டுப்பட்டு, பிற நாடுகளின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை மீறுவதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும். '' என்று கூறப்பட்டுள்ளது.

மதுரோ கைதுக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் எதிர்ப்பு தெரிவித்து கூறியதாக சீன ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
இன்றைய உலகம் ஒரு நூற்றாண்டில் கண்டிராத மாற்றங்களையும், கொந்தளிப்புகளையும் சந்தித்து வருகிறதாகவும், ஒரு தலைபட்சமான மற்றும் மிரட்டல் நடவடிக்கைகள் சர்வதேச ஒழுங்கை கடுமையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன என்று கூறியுள்ளதாக செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், மற்ற நாடுகளின் மக்கள் தேர்வு செய்த வளர்ச்சிப்பாதையை அனைத்து நாடுகளும் மதிக்க வேண்டும் என்றும், சர்வதேச சட்டம் மற்றும் ஐநா சபையின் சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் சீன அதிபர் குறிப்பிட்டுள்ளதாகவும், குறிப்பாக பெரிய சக்திகள் அவ்வாறு செய்வதில் முன்னிலை வகிக்க வேண்டும் என்று அதன் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, வெனிசுலா அமெரிக்கா தாக்குதல் இறையாண்மையின் மீதான அத்துமீறல் என வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதலுக்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வடகொரியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
''வெனிசுலாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதல் இறையாண்மையின் மீதான அத்துமீறல். அமெரிக்காவின் நடவடிக்கைகள் சர்வதேச சட்ட ஒழுங்கை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளன. வெனிசுலாவின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.
ஏற்கனவே பலவீனமான பிராந்திய சூழ்நிலையில் ஸ்திரமின்மை அதிகரிப்பது தொடர்பாகவும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். சர்வதேச சமூகம் நீண்ட காலமாக அடிக்கடி கண்டு வரும் அமெரிக்காவின் முரட்டுத்தனமான மற்றும் மிருகத்தனமான தன்மையை மீண்டும் ஒருமுறை தெளிவாக உறுதிப்படுத்தும் மற்றொரு உதாரணம் இந்த சம்பவம்.

வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் கட்டுப்படுத்தப்படா விட்டால், பிராந்திய மற்றும் சர்வதேச உறவுகளுக்கு பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். உலக சமூகம் இந்த சூழ்நிலைக்கு எதிர்வினையாற்ற வேண்டும்.
ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டங்களை வேண்டுமென்றே மீறுவதாகும். இதனை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இறையாண்மையை மீறுவதற்கு எதிராக, கண்டனக் குரல்களை எழுப்ப வேண்டும்.'' என்று அந்த கண்டன அறிக்கையில் வடகொரியா தெரிவித்துள்ளது.
English Summary
China has condemned the United States stating that the arrest of the Venezuelan president is a serious violation of sovereignty