ஈரானில் மீண்டும் போர் தீவிரம்; இந்தியர்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ள மத்திய அரசு..!
Central Government issues new advisory for Indians to avoid travel to Iran
இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர் தீவிரமடைந்துள்ளது. இந்த சூழலில் இந்தியர்கள் ஈரானுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு மத்திய அரசு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இது தொடர்பாக ஈரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது;
சமீபத்திய சூழலைக் கருத்தில் கொண்டு, இந்தியர்கள் ஈரானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்ற முந்தைய அறிவுறுத்தலை தூதரகம் மீண்டும் வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளது. அத்துடன், தற்போது ஈரானில் உள்ள இந்தியர்கள் கிடைக்கக்கூடிய போக்குவரத்து வசதிகள் மூலம் நாட்டை விட்டு வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணைகளைக் கொண்டு தாக்கியது. இதையடுத்து, இஸ்ரேலும் ஈரான் மீது தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, நேற்று வெளியிட்ட அறிக்கையில் ஈரானில் உள்ள இந்தியர்கள் அடுத்த 48 மணி நேரத்துக்கு தாங்கள் இருக்கும் இடத்திலேயே இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு இருந்தது.
இதனிடையே, இஸ்ரேலும் ஈரானும் உடனடியாக தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;

''இஸ்ரேலும் ஈரானும் உடனடியாக தாக்குதல்களை நிறுத்த வேண்டும்'' என்றும், மற்றொரு பதிவில், “இஸ்ரேல், ஈரான் ஆகிய இரு தரப்பினரும் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்ய விரும்புகின்றனர்.
அறியாமை அல்லது முட்டாள்தனம் குறுக்கிடாத பட்சத்தில் அமைதிக்கான இறுதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும். இறுதி ஒப்பந்தம் எட்டப்படும் வரை, (ஹார்மூஸ் ஜலசந்தி) முற்றுகை முழு வீச்சில் தொடர்ந்து அமலில் இருக்கும். துரிதமான நடவடிக்கைகள் வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
English Summary
Central Government issues new advisory for Indians to avoid travel to Iran