இந்தியர்களுக்கு எதிராக “மார்ச் பார் ஆஸ்திரேலியா” என்ற அமைப்பு பேரணி: கண்டனம் தெரிவித்த ஆஸ்திரேலிய அரசு
Australian government condemns March for Australia rally against Indian
ஆஸ்திரேலியாவில் சமீப காலமாக குடியேற்றம் குறித்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் பிரதமர் அந்தோணி அல்பனிஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி செய்து வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து குடியேறும் மக்களை எதிர்த்து “மார்ச் பார் ஆஸ்திரேலியா” என்ற அமைப்பு போராட்டங்களை நடத்தி வருகிறது. குறிப்பாக இந்தியர்களின் குடியேற்றத்துக்கு எதிராகவே அவர்கள் அதிகமாக குரல் கொடுத்து வருகின்றனர்.
தலைநகர் கான்பெரா, சிட்னி, மெல்போர்ன் உள்ளிட்ட பல நகரங்களில் அண்மையில் பெரிய அளவில் பேரணிகள் நடைபெற்றன. தேசியக் கொடிகளை ஏந்தியபடி ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கான்பெராவில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றவர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்றபோது, போலீசார் உடனடியாக தடுத்து நிறுத்தினர். அதேபோல் சிட்னியில் நடந்த பேரணியிலும் குடியேற்றத்திற்கு எதிராக கோஷங்கள் முழங்கப்பட்டன.
இந்தப் பேரணிகள் பல நகரங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்றதால், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் அதிகப்படியாக குவிக்கப்பட்டனர். குறிப்பாக இந்தியர்களை குறிவைத்து எழுப்பப்பட்ட கோஷங்கள், அந்நாட்டில் வாழும் இந்திய சமூகத்தில் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய அரசு, இந்தக் குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. “இந்த நாட்டில் பிரிவினையை உருவாக்கும் மக்களுக்கு இடமில்லை. இத்தகைய நடவடிக்கைகள் வெறுப்புணர்வை பரப்புகின்றன” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தற்போது ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 2.72 கோடியாக உள்ளது. இதில் சுமார் 10 லட்சம் இந்தியர்கள் அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் வாழ்ந்து வருகின்றனர். எனவே, இந்தியர்களை நேரடியாக குறிவைத்து நடைபெறும் இந்தக் குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்கள், அங்கு வாழும் இந்திய சமூகத்துக்கு பெரும் சவாலாகவே பார்க்கப்படுகின்றன.
English Summary
Australian government condemns March for Australia rally against Indian