சமூக ஊடகங்களுக்கு தடை விதித்துள்ள நேபாளம்: போராட்டத்தில் ஈடுப்பட்ட 16 பேர் உயிரிழப்பு: 250க்கு மேற்பட்டோர் காயம்..!
16 killed in Nepal protests against social media ban
நேபாளத்தில் ஆன்லைன் தளங்களை ஒழுங்குபடுத்தவும், தேவையற்ற உள்ளீடுகளை கண்காணிக்கவும் அந்நாட்டு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி புதிய விதிமுறைகளை அரசு வெளியிட்டது.
இதன்படி சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்களை பதிவு செய்ய நீதிமன்றம் அந்நாட்டு அரசு ஏழு நாள் அவகாசம் வழங்கியிருந்த நிலையில், அவகாசம் முடிவடைந்தும், பேஸ்புக், வாட்ஸாப், இன்ஸ்டாகிராம், யு டியூப், எக்ஸ், லிங்க்டுஇன் உள்ளிட்ட நிறுவனங்கள் பதிவு செய்யவில்லை. இதையடுத்து குறித்த வலைத்தளங்களை முடக்கி, நேபாளத்தின் தொலைத்தொடர்பு ஆணையத்துக்கு அந்நாட்டு தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதனையடுத்து அவை முடக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து அரசை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் 16 பேர் உயிரிழந்துள்ளதோடு, 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
குறிப்பாக ஜென் இசட் எனப்படும் 2003-ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்த இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறித்த தடையை நீக்க வேண்டும். ஊழல் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி போராட்டம் நடத்துகின்றனர். இதயைனடுத்து தெருக்களில் ஒன்று கூடுவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

உத்தரவை மீறியும், பாராளுமன்றத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளிலும் போராட்டக்காரர்கள் புகுந்து போராட்டம் நடத்தினர். இதன்போது பாதுகாப்புக்காக போலீசாருடன் ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டனர். பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும், போராட்டக்காரர்கள் மரக்கட்டைகளையும், தண்ணீர் பாட்டீல்களையும் போலீசார் மீது வீசியதுடன், அரசுக்கு எதிராக கோஷம் போட்டு தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர்.
கட்டுக்கடங்காத வகையில் போராட்டம் நடத்துபவர்களை கலைக்க ரப்பர் வெடிகுண்டு, கண்ணீர் புகை குண்டுகளை, தண்ணீரை பீய்ச்சி அடித்தும் பாதுகாப்பு படையினர் அவர்களை களைக்க முயன்றுள்ளதோடு, தடியடியும் நடத்தினர். இந்தமோதலின் போது 16 பேர் உயிரிழந்துள்ளதோடு, 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
16 killed in Nepal protests against social media ban