தேர்தலுக்கு முன்பே இ.வி.எம்.மில் 25,000 வாக்குகள் முன்னரே பதிவு" – ஆர்.ஜே.டி.யின் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுப்பு!
Bihar election 2025 EC RJD
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்குவதற்கு முன்பே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) தலா 25,000 வாக்குகள் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டிருந்தன என்று ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் (RJD) மூத்த தலைவர் ஜகதானந்த் சிங் எழுப்பிய குற்றச்சாட்டை இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) திட்டவட்டமாக மறுத்துள்ளது.
மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 25 இடங்களில் மட்டுமே ஆர்.ஜே.டி. வெற்றி பெற்ற நிலையில், இந்தத் தேர்தல் முடிவு மக்களின் விருப்பங்களைப் பிரதிபலிக்கவில்லை என்றும், முறைகேடு காரணமாக நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
ஜகதானந்த் சிங் மேலும் கூறுகையில், "இந்த முறைகேட்டைத் தாண்டியும் எங்கள் கட்சி 25 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது" என்று குற்றம் சாட்டினார்.
தேர்தல் ஆணையத்தின் விளக்கம்:
இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துச் செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஆர்.ஜே.டி.யின் குற்றச்சாட்டு தொழில்நுட்ப ரீதியிலும் நடைமுறை ரீதியிலும் தவறானது என்று விளக்கம் அளித்துள்ளது.
பாதுகாப்பு: EVM-கள் வைஃபை, புளூடூத், இணையதளம் அல்லது எந்த வெளிப்புறத் தொடர்புடனும் இணைக்கப்படவில்லை. எனவே, வெளியில் இருந்து முறைகேடு செய்ய வாய்ப்பே இல்லை.
நடைமுறைகள்: வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு ஒவ்வொரு இயந்திரத்திலும் பூஜ்யம் வாக்குகள் இருப்பதை அனைத்து வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையிலும் உறுதிசெய்யும் ஒத்திகை (Mock Poll) நடத்தப்பட்டது. அப்போது பதிவு செய்யப்பட்ட வாக்குகள் அகற்றப்பட்டு, இயந்திரங்களுக்குச் சீல் வைப்பது உட்பட அனைத்துப் பணிகளும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையிலேயே மேற்கொள்ளப்பட்டன.
ஆட்சேபம்: தேர்தல் எந்தக் கட்டத்திலும் முரண்பாடுகளோ, முறைகேடுகளோ நடைபெற்றதாக ஆர்.ஜே.டி. தரப்பு ஆட்சேபிக்கவில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
English Summary
Bihar election 2025 EC RJD