தமிழகத்தில் நவம்பர் 25 வரை கனமழை எச்சரிக்கை; எந்த எந்த மாவட்டங்களுக்கு வாய்ப்பு..?
Heavy rain warning in Tamil Nadu till November 25
தமிழகத்தில் நாளை முதல் 25-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
''குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு அல்லது வட மேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நவம்பர் 22-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 24-ஆம் தேதி வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும்.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (நவம்பர் 20) ஓரிரு இடங்களிலும், 21-ஆம் தேதி ஒருசில இடங்களிலும், 22 முதல் 25-ஆம் தேதி வரை கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் நாளை மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களிலும், 21-ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
22-ஆம் தேதி 'டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், 23-ஆம் தேதி ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், 24-ஆம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், கடலூர் மாவட்டங்களும், காரைக்கால் பகுதிகளிலும், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 20, 21 தேதிகளில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று அதிகபட்சமாக 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் இன்று காலை 08.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 23 செமீ, நாலுமுக்கில் 21 செமீ, காக்காச்சியில் 19 செமீ, மாஞ்சோலையில் 18 செமீ, தென்காசி மாவட்டம் ஆயிக்குடியில் 14 செமீ, தென்காசியில் 13 செமீ, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம், தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் தலா 10 செமீ, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 09 செமீ மழை பதிவாகியுள்ளது.'' என்று வானிலை மையத்தின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
English Summary
Heavy rain warning in Tamil Nadu till November 25