தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு இன்று 'மஞ்சள் எச்சரிக்கை' – வளிமண்டல சுழற்சி காரணமாகப் பலத்த மழைக்கு வாய்ப்பு!
Yellow Alert Issued for 16 Districts in Tamil Nadu Heavy Rain
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய தென் கேரளாப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டின் 16 மாவட்டங்களுக்கு இன்று (ஜூன் 1, திங்கள்கிழமை) 'மஞ்சள் எச்சரிக்கை' (Yellow Alert) விடுக்கப்பட்டுள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 6-ஆம் தேதி வரை மாநிலத்தின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
மாவட்ட வாரியான மழை முன்னறிவிப்பு
இன்றைய நிலவரம் (ஜூன் 1): நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30-40 கி.மீ வேகம்) கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
ஜூன் 2 மற்றும் 3 (செவ்வாய், புதன்): நெல்லை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், கன்னியாகுமரி, தென்காசி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை நீடிக்கும்.
ஜூன் 4 (வியாழக்கிழமை): விருதுநகர், தென்காசி, நெல்லை மலைப் பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், குறிப்பிட்ட இந்த நாட்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் நிலவரம்
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
வெப்பநிலை மற்றும் கடந்த 24 மணி நேர மழை அளவு
அதிகபட்ச வெப்பநிலை: தமிழகத்தில் கோடையின் தாக்கம் ஆங்காங்கே நீடிக்கிறது. நேற்று அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 106.16°F (41.2°C) வெப்பநிலை பதிவானது. திருச்சி மற்றும் திருத்தணியில் 104.54°F வெப்பநிலையும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 102.2°F வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
பதிவான மழை அளவு: நேற்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகத் திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 70 மி.மீ மழையும், நாலுமுக்கில் 60 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
கேரளக் கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் நாளை (ஜூன் 2) சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
English Summary
Yellow Alert Issued for 16 Districts in Tamil Nadu Heavy Rain