இனி தபால் நிலையத்திற்குப் போக வேண்டாம்...! பள்ளிகளிலேயே தேடி வரும் செல்வ மகள் சேமிப்புத் திட்டம்...! - பெற்றோர்களுக்கு அரிய வாய்ப்பு...! - Seithipunal
Seithipunal


பெண் குழந்தைகளின் கல்வி, உயர்கல்வி மற்றும் எதிர்கால நிதி பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் அதிகளவில் மாணவிகளை இணைக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு சேர்க்கை முகாம்களை நடத்த தபால் துறை விரிவான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘சுகன்யா சம்ரித்தி யோஜனா’ எனப்படும் சிறுசேமிப்பு திட்டம், தமிழகத்தில் ‘செல்வ மகள் சேமிப்பு திட்டம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளின் பொருளாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

‘பெண் குழந்தையைப் பாதுகாப்போம்; பெண் குழந்தைக்கு கல்வி அளிப்போம்’ என்ற தேசிய இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்தத் திட்டத்தில், ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சமாக ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இதில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வருமான வரிச் சலுகையும் கிடைக்கிறது. பெண் குழந்தை பிறந்த காலத்திலிருந்தே கணக்கைத் தொடங்கி தொடர்ந்து சேமிப்பு மேற்கொள்ளலாம். தற்போது இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 8.2 சதவீத வட்டி வழங்கப்படுவதால், பெற்றோர்களிடையே இந்தத் திட்டத்திற்கு வரவேற்பு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் இதுவரை 3 கோடியே 92 லட்சத்து 64 ஆயிரத்து 747 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் மூலம் ரூ.2 லட்சத்து 59 ஆயிரத்து 577 கோடியே 20 லட்சம் வரை சேமிப்பு திரட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 38 லட்சத்து 90 ஆயிரத்து 666 கணக்குகள் தொடங்கப்பட்டு, ரூ.31 ஆயிரத்து 211 கோடியே 29 லட்சம் சேமிப்புத் தொகை உருவாகியுள்ளது. சென்னையில் மட்டும் 11.3 லட்சம் கணக்குகள் செயல்பாட்டில் உள்ளன.

அகில இந்திய அளவில் உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகம், மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இந்தத் திட்டத்தில் முன்னணி இடத்தைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தச் சேமிப்புத் திட்டத்தில் கணக்கு தொடங்கும் போது, பெண் குழந்தை இந்தியக் குடியுரிமை பெற்றவராகவும், 10 வயதிற்குள் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் மட்டுமே கணக்கைத் தொடங்க முடியும். ஒரு பெண் குழந்தையின் பெயரில் ஒரு கணக்கு மட்டுமே தொடங்க அனுமதி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் வரை இந்தத் திட்டத்தின் பயனைப் பெறும் வகையில் கணக்குகள் தொடங்க இயலும்.

இந்த நிதியாண்டிற்கான கல்விச் செயல்பாடுகள் தற்போது தொடங்கியுள்ள நிலையில், பள்ளி மாணவிகளை அதிக அளவில் இந்தத் திட்டத்தில் இணைக்கும் நோக்கில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு மற்றும் கணக்குத் தொடக்க சிறப்பு முகாம்களை நடத்த தபால் துறை திட்டமிட்டுள்ளது.

வரும் மாதங்களில் இந்த முகாம்கள் மூலம் பெற்றோர்களுக்கு திட்டத்தின் பயன்கள் குறித்து விளக்கமளித்து, அதிகளவில் சிறுமிகளை இணைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தபால் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

No more going post office Selvamaka Savings Plan coming schools rare opportunity parents


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->