ரூ.5,000 லஞ்சத்திற்கு ஆசைப்பட்டுச் சிக்குன வி.ஏ.ஓ...! - திருப்பூரில் அரங்கேறிய அதிரடி அரெஸ்ட்...! - Seithipunal
Seithipunal


திருப்பூரில் பட்டா பெயர் மாற்றம் செய்து தருவதற்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் கோரிய கிராம நிர்வாக அலுவலர், லஞ்ச ஒழிப்பு காவலர்கள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் கையும் களவுமாக சிக்கி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் பழனிசாமி நகரைச் சேர்ந்த மணிவாசகம் (31), தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு, அவர் பணிபுரியும் நிறுவனத்தின் பெயரில் 20 சென்ட் நிலத்தை வாங்கியிருந்தார். அதற்கான பட்டாவை நிறுவனத்தின் பெயருக்கு மாற்றிக் கொள்ளும் நோக்கில் இரண்டு முறை விண்ணப்பித்தும், எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் மனு தொடர்ந்து நிலுவையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மூன்றாவது முறையாக இணையவழியில் விண்ணப்பித்த மணிவாசகத்தை, தொட்டிபாளையம் கிராம நிர்வாக அலுவலராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிசார் அப்துல் ரகுமான் (40) தொடர்புகொண்டு பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது பட்டா பெயர் மாற்ற நடவடிக்கையை விரைவாக மேற்கொள்ள ரூ.10 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டதாக கூறப்படுகிறது.

அதற்கு மணிவாசகம், அவ்வளவு தொகையை வழங்க இயலாது என்று தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து, லஞ்சத் தொகையை ரூ.5 ஆயிரமாகக் குறைத்து வழங்குமாறு நிசார் அப்துல் ரகுமான் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், லஞ்சம் வழங்க விருப்பமில்லாத மணிவாசகம், இதுகுறித்து திருப்பூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு காவலர்கள் திட்டமிட்ட நடவடிக்கையை மேற்கொண்டனர். அவர்களின் அறிவுறுத்தலின்படி, ரசாயனப் பொடி பூசப்பட்ட ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள நோட்டுகளுடன் மணிவாசகம் நேற்று தொட்டிபாளையம் கிராம நிர்வாக அலுவலகத்துக்குச் சென்றார்.

அங்கு பணியில் இருந்த நிசார் அப்துல் ரகுமானிடம் பணத்தை வழங்கியவுடன், மறைந்திருந்து கண்காணித்து வந்த லஞ்ச ஒழிப்பு காவலர்கள் உடனடியாக விரைந்து சென்று, லஞ்சப் பணத்தை பெற்றுக்கொண்ட நிலையில் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

VAO caught trying take bribe 5000 Action packed arrest Tiruppur


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->