இனி மழை உறுதி! -16ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்கும் என வானிலை மையம் கணிப்பு
Rain now confirmed Meteorological Department predicts that northeast monsoon begin from 16th
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை துளிகள் மக்களின் மனதிலும் குளிர்ச்சியை ஊட்டியுள்ளன. இதில் பெரும்பாலும் இரவு நேரங்களில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து, இதமான காற்றும் நனைந்த மண்வாசனையும் மாநிலம் முழுவதும் பரவி, மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) தமிழகத்தின் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனுடன் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் வாய்ப்பும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், நீலகிரி, ஈரோடு மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மிதமான மேகமூட்டத்துடன் காணப்படும்.
சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம். மேலும், நகரின் அதிகபட்ச வெப்பநிலை 34° முதல் 35°C வரை, குறைந்தபட்ச வெப்பநிலை 26° முதல் 27°C வரை பதிவாகும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையில், விரைவில் துவங்கவுள்ள வடகிழக்கு பருவமழை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்ட மாநில அளவிலான ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.
அக்டோபர் தொடங்கியதும் 10 நாட்கள் கடந்தும் பருவமழை அதிகாரப்பூர்வமாக துவங்காத நிலையில், தற்போது வானிலை ஆய்வாளர்கள் மகிழ்ச்சியான செய்தி தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வருகிற 16 முதல் 18 ஆம் தேதிக்குள் தொடங்கும் சாதகமான சூழல் உருவாகியுள்ளது.இதனால் விவசாயிகள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் “இனி மழை நிச்சயம் வரும்” என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.
English Summary
Rain now confirmed Meteorological Department predicts that northeast monsoon begin from 16th