உருவாகும் புயல்: தமிழகத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்!
orange alert tamilnadu cyclone
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த வாரம் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு வலுவிழந்ததால், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெரும் மழை பெய்யவில்லை.
இந்நிலையில், தென்கிழக்கு வங்கக் கடலில் இரண்டு நாட்களுக்கு முன்பு உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 790 கி.மீ. மற்றும் விசாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 850 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது.
மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து ‘மோன்தா’ எனும் புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்.27 அன்று தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக் கடலில் உருவாகி, பின்னர் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, அக்.28 இரவு காக்கிநாடா அருகே ஆந்திராவின் மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது மணிக்கு 90 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இந்த புயல் ஆந்திர மாநிலத்தை கடக்கக்கூடியதால், தமிழ்நாட்டில் பெரிய தாக்கம் ஏற்படாது. எனினும், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை இருக்கும் என வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் வெளியிட்டுள்ளது.
English Summary
orange alert tamilnadu cyclone