தமிழகத்தில் நாளை 08 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை வாய்ப்பு..!
Heavy rain accompanied by thunder is likely in 8 districts of Tamil Nadu tomorrow
தமிழகத்தில் நாளை (மே 26), கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
மத்திய கிழக்கு வங்கக்கடல் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் வரை, தென்மேற்கு வங்கக்கடல், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் வழியாக சுமார் 3.1 கிமீ முதல் 5.8 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் மே 31-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், மே 26 ( நாளை) கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும், நீலகிரி, ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் 29-ஆம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதேப்போன்று, தமிழகத்தில் இன்று காலை 08.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 11 செமீ, திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 09 செமீ, பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம், திருச்சி மாவட்டம் நந்தியாறில் தலா 07 செமீ, கரூர் மாவட்டம் ஆனைப்பாளையம், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, நீலகிரி மாவட்டம் கெத்தை, சேலம் மாவடடம் மேட்டூரில் தலா 06 செமீ மழை பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Heavy rain accompanied by thunder is likely in 8 districts of Tamil Nadu tomorrow