எல்நினோ தாக்கத்தால் தமிழகத்தில் அதீத வானிலை மாற்றம்...! கனமழை முதல் கடுமையான வெப்ப அலை வரை...! - அதிரடிப் பரிந்துரைகளை வழங்கிய நிபுணர் குழு
Extreme weather changes Tamil Nadu due to El Nino impact From heavy rains to severe heat waves expert panel made actionable recommendations
எல்நினோவின் தாக்கத்தால் தமிழகத்தில் ஏற்படக்கூடிய பருவநிலை மாற்றங்களை முன்கூட்டியே கணித்து, அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு நிபுணர் ஆலோசனை குழுவை அமைத்துள்ளது.அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 7 நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்.
எல்நினோவின் சாத்தியமான தாக்கங்களை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவது இந்த குழுவின் முக்கிய பணியாகும்.இந்த நிலையில், குழுவின் முதல்கட்ட ஆய்வின் அடிப்படையில் பரிந்துரைகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.எல்நினோ என்றாலே வறட்சி ஏற்படும் என்கிற ஒரே கண்ணோட்டத்தில் தமிழக அரசு திட்டமிடக்கூடாது என்று நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

வருகிற 2026-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தின் சில பகுதிகளில் எதிர்பாராத அளவுக்கு கனமழை கொட்டித்தீர்க்க வாய்ப்புள்ளது. இதனால் நகர்ப்புறங்களில் வெள்ளப்பெருக்கு, ஆறுகளில் வெள்ளம் மற்றும் கடலோர பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய சூழல் உருவாகலாம்.அதேவேளை, சில பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்து, நீர்த்தேக்கங்களுக்கு வரும் நீரின் அளவு சரியக்கூடும். இதன் காரணமாக குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்கான தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2027-ம் ஆண்டு கோடை காலத்தில் சில பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக வெப்பநிலை நிலவுவதுடன், கடுமையான வெப்ப அலை வீசுவதற்கான சாத்தியத்தையும் கருத்தில் கொண்டு அரசு முன்கூட்டியே நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.2027-ம் ஆண்டு கோடை காலத்தை கருத்தில் கொண்டு, குறைந்த அளவு தண்ணீரில் வளரக்கூடிய, குறுகிய காலத்தில் அறுவடைக்கு தயாராகும் மற்றும் அதிக வெப்பம், வறட்சியை தாங்கும் பயிர் ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்ய ஊக்குவிக்க வேண்டும்.
மேலும், தண்ணீர் அதிகமாக தேவைப்படும் பயிர்களை நீர் பற்றாக்குறைக்கு உள்ளாகக்கூடிய பகுதிகளில் சாகுபடி செய்வதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.வெப்ப அலை ஏற்படக்கூடிய பகுதிகளில் அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை அதிக வெப்பத்தை சமாளிக்கும் வகையில் மேம்படுத்த வேண்டும்.
குறிப்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கட்டிடங்களுக்குள் வெப்பம் அதிகரிப்பதை கட்டுப்படுத்தும் வகையில் வெப்பத்தடுப்பு கூரைகள் அமைப்பதுடன், சூரிய வெப்பத்தை பிரதிபலிக்கும் மேற்பரப்புகளை பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.2026-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக ஆறுகள், கால்வாய்கள், மழைநீர் செல்லும் பாதைகள், நீர்த்தேக்கங்கள், அணைகள், மதகுகள் மற்றும் கரைகள் ஆகியவற்றை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.
பழுதடைந்த பகுதிகளை கண்டறிந்து அவற்றில் அவசர சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதுடன், ஆறுகள், கால்வாய்கள் மற்றும் முக்கியமான வடிகால்களில் தேங்கியுள்ள வண்டல் மண், குப்பைகள் உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டும் என நிபுணர் குழு அறிவுறுத்தியுள்ளது.பேரிடர் தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்களை பொதுமக்களுக்கு எளிதாக புரியும் வகையில் தமிழில் விரைவாக கொண்டு சேர்க்க வேண்டும்.
குறுஞ்செய்தி, வானொலி, சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல் தொடர்பு வழிகளை பயன்படுத்தி, குறிப்பிட்ட மாவட்டம் மற்றும் வட்டாரத்தில் நிலவும் அபாயத்தின் தன்மைக்கு ஏற்ப எச்சரிக்கைகளை வெளியிட வேண்டும்.ஏற்கனவே வெள்ள பாதிப்பை எதிர்கொண்ட பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து, அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Extreme weather changes Tamil Nadu due to El Nino impact From heavy rains to severe heat waves expert panel made actionable recommendations