பானி பூரி கடையில் தகராறு...! 27 வழக்குகள் கொண்ட பெண் ரௌடி கைது...! - வீட்டில் 9 மதுபாட்டில்கள் பறிமுதல்
Dispute at Pani Puri shop Female rowdy with 27 cases arrested 9 liquor bottles seized from house
சென்னை தியாகராயநகரில் பானி பூரி கடைக்காரரை கட்டையால் தாக்கி காயப்படுத்திய பெண்ணை காவலர்கள் கைது செய்தனர். மேலும், அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9 மதுபாட்டில்களையும் காவலர்கள் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த பெண் மீது ஏற்கனவே 27 குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

தியாகராயநகர் டாக்டர் தாமஸ் சாலையில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அபினேஷ் (25) என்பவர் பானி பூரி கடை நடத்தி வருகிறார். அவரது வீட்டின் அருகே நிஷாந்தி (33) என்பவர் வசித்து வருகிறார்.நிஷாந்தி தனது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை அறிந்த அபினேஷ், மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அப்போது ஆத்திரமடைந்த நிஷாந்தி, அங்கிருந்த கட்டையை எடுத்து அபினேஷை தாக்கியதுடன், அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் காயமடைந்த அபினேஷ் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.அதன்பேரில் நிஷாந்தியை கைது செய்த காவலர்கள், அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9 மதுபாட்டில்கள் சிக்கின. அவற்றை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்ட நிஷாந்தி குறித்து காவலர்கள் நடத்திய விசாரணையில், அவர் பரங்கிமலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்தது.
மேலும், சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்தது தொடர்பாக அவர் மீது ஏற்கனவே 15 வழக்குகள் இருப்பதும், கஞ்சா, திருட்டு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்கள் தொடர்பாக மேலும் வழக்குகள் பதிவாகியிருப்பதும் தெரியவந்தது.
இதன்படி, நிஷாந்தி மீது மதுபான விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 27 குற்ற வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Dispute at Pani Puri shop Female rowdy with 27 cases arrested 9 liquor bottles seized from house