நீதிமன்றத்தில் சினிமா பாணியில் தப்பியோட்டம்...! - காவலர்களை ஏமாற்றி சுவர் ஏறி குதித்து தப்பிய கொலை வழக்கு கைதி...!
Cinematic escape from court Murder convict escapes by jumping over wall tricking guards
தேனி மாவட்டத்தில் கொலை வழக்கில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட வாலிபர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்டபோது காவலர்களை ஏமாற்றி சுவர் மீது ஏறி குதித்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெரியகுளம் அருகே உள்ள குள்ளப்புரம் கீழத்தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (24).

இவர் மீது கடந்த 2022-ம் ஆண்டு ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தேனி மாவட்ட அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கார்த்திக் தொடர்ந்து இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.நீதிமன்ற உத்தரவின்பேரில் கார்த்திக்கை தேடி வந்த காவலர்கள், அவரை பிடித்து கைது செய்தனர்.
பின்னர் காவல் ஏட்டுகள் நாகராஜன், முத்துக்குமார் ஆகியோர் கார்த்திக்கை லட்சுமிபுரத்தில் உள்ள தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.அப்போது யாரும் எதிர்பாராத வகையில் கார்த்திக் காவலர்களின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக திடீரென ஓட்டம் பிடித்தார்.
நீதிமன்ற வளாகத்தில் இருந்த சுவரின் மீது வேகமாக ஏறிய அவர், மறுபுறம் குதித்து தப்பி ஓடினார்.இதனால் அதிர்ச்சி அடைந்த காவலர்கள் அவரை விரட்டிச் சென்றனர்.
இருப்பினும் கார்த்திக்கை பிடிக்க முடியவில்லை.இதுகுறித்து காவல் ஏட்டு நாகராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் தென்கரை காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர். தப்பி ஓடிய கார்த்திக்கை பிடிக்க தனிப்படை அமைத்தும், பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் காவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Cinematic escape from court Murder convict escapes by jumping over wall tricking guards