தேர்தல் நேரத்தில் திடுக்கிடும் ரெய்டு...! திமுக நிர்வாகிகள் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.48.42 லட்சம் சிக்கியது எப்படி...?
shocking raid during election season How 48point42 lakhs stashed house DMK executives found
தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பரபரப்புக்கு மத்தியில், மூலனூரில் தி.மு.க. நிர்வாகிகள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.48.42 லட்சம் ரொக்கம் சிக்கியது. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி), திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு இரு தொகுதிகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தாராபுரம் தொகுதியில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பட்டுவாடா செய்வதை தடுப்பதுடன், தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க பறக்கும் படையினர் உள்ளிட்ட குழுவினர் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மூலனூர் பகுதியில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நிலை கண்காணிப்பு குழுவினருக்கு தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதையடுத்து பறக்கும் படையினர் மூலனூர், தாளக்கரை பிரிவுக்கு விரைந்து சென்று அங்குள்ள தி.மு.க. நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் மூலனூர் தி.மு.க. பேரூராட்சி அவைத்தலைவர் விஸ்வநாதன் வீட்டில் ரூ.40.79 லட்சம் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து பேரூராட்சி 6-வது வார்டு கிளை செயலாளர் செல்வராஜ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
அங்கு ரூ.7.63 லட்சம் ரொக்கம் சிக்கியது.இரு இடங்களிலும் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் மொத்தம் ரூ.48.42 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்கும் வகையில் தாராபுரம் தொகுதியில் கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
English Summary
shocking raid during election season How 48point42 lakhs stashed house DMK executives found