“ரிஷப் பண்ட் மூலமாகத்தான் ஜாகீர் கானிடம் பேசினார்கள்!” – சிஎஸ்கே பின்னணியை அஸ்வின் வெளியிட்ட ரகசிய தகவல்
They spoke to Zaheer Khan through Rishabh Pant Ashwin reveals a secret detail about the CSK backstory
சிஎஸ்கே அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது நியமனத்தின் பின்னணியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்து முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். குறிப்பாக ரிஷப் பண்ட் மூலமாகவே சிஎஸ்கே நிர்வாகமும், தோனியும் ஜாகீர் கானுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அஸ்வின் கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஓராண்டு கால ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த நியமனம் குறித்து கிரிக்கெட் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து பேசிய அஸ்வின், ஜாகீர் கானுக்கு ஓராண்டு மட்டுமே ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பதை தான் முக்கியமாக கவனிப்பதாக தெரிவித்துள்ளார்.
“ஓராண்டில் ஐபிஎல் தொடருக்காக ஒரு அணியை முழுமையாக கட்டமைத்துவிட முடியாது. ஜாகீர் கான் மிகவும் ஸ்மார்ட்டான பயிற்சியாளர். சிஎஸ்கே அணிக்கு அவரை பயிற்சியாளராக கொண்டு வந்தது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. அணியின் நிர்வாகம் பல்வேறு நிபந்தனைகளை வைத்திருக்கிறது. இருந்தாலும் இந்த சூழலில் ஜாகீர் கானை தேர்வு செய்திருப்பது முக்கியமான முடிவு” என்ற வகையில் அஸ்வின் பேசியுள்ளார்.
ஜாகீர் கான் நியமனத்தில் தோனியின் பங்களிப்பு இருப்பதாகவும் அஸ்வின் தெரிவித்துள்ளார். “நிச்சயமாக தோனிதான் இறுதி முடிவை எடுத்திருப்பார். ஆனால் ரிஷப் பண்ட் மூலமாகவே ஜாகீர் கானிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது” என அஸ்வின் கூறியுள்ளார்.
மேலும், தோனியுடன் ஜாகீர் கானுக்கு நீண்டகால நட்பும் புரிதலும் இருப்பதால், அணியின் முடிவுகளில் அவர் வெறுமனே நிர்வாகம் சொல்வதை ஏற்றுக்கொள்ளும் பயிற்சியாளராக இருக்கமாட்டார் என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார். தோனியுடன் மிகவும் நெருக்கமாக பேசக்கூடியவர் ஜாகீர் கான் என்பதால், தனது சொந்த கருத்துகளையும் அவர் அணியில் வலியுறுத்துவார் என அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.
ஜாகீர் கானிடம் சிஎஸ்கே நிர்வாகம் எதிர்பார்க்கும் மற்றொரு முக்கிய விஷயம், அணியின் தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு அம்சங்களில் மாற்றங்களை கொண்டு வருவது என்றும் அஸ்வின் கூறியுள்ளார். குறிப்பாக பிட்ச் எப்படி செயல்படுகிறது, நாவலூர் பகுதியில் உள்ள சிஎஸ்கே மைதானத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள், வீரர்களிடம் காணப்படும் தொழில்நுட்ப குறைபாடுகளை சரிசெய்வது உள்ளிட்ட பல விஷயங்களில் ஜாகீர் கானின் அனுபவம் உதவக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜாகீர் கான் மீது தோனிக்கும் மிகப்பெரிய நம்பிக்கை இருப்பதாகவும் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார். இதனால் புதிய பயிற்சியாளர் வருகையால் சிஎஸ்கே அணியின் செயல்பாட்டு அணுகுமுறையிலும் சில மாற்றங்கள் வரலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
அதே நேரத்தில், தலைமைப் பயிற்சியாளர் மாற்றப்பட்டுள்ளதால் அணியின் கேப்டன்சியிலும் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. குறிப்பாக சஞ்சு சாம்சனின் பெயரும் சில பேச்சுகளில் அடிபடுவதாக அஸ்வின் குறிப்பிட்டுள்ளார். ஆனால் கேப்டன்சி தொடர்பாக தற்போது முழுமையான தகவல் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 16 ஆண்டுகளாக சிஎஸ்கே அணி ஒரே பயிற்சியாளரான ஸ்டீபன் ஃப்ளெமிங்குடன் நீண்டகாலமாக பயணித்த நிலையில், தற்போது ஓராண்டு காலத்திற்கு புதிய பயிற்சியாளரை நியமித்திருப்பது அணியின் எதிர்கால திட்டங்கள் குறித்த விவாதத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஜாகீர் கான் தலைமையில் சிஎஸ்கே எந்த மாதிரியான மாற்றங்களை எதிர்கொள்ளப் போகிறது என்பதுதான் தற்போது ரசிகர்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
English Summary
They spoke to Zaheer Khan through Rishabh Pant Ashwin reveals a secret detail about the CSK backstory