தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கான சூழல் நீடிக்கும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குறிப்பாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என்பதால், பொதுமக்கள் வானிலை நிலவரத்தை தொடர்ந்து கவனித்து செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.இது தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 8.30 மணியளவில் அதே பகுதியில் நிலவியது.
மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து, இன்று இரவு விசாகப்பட்டினம் மற்றும் கோபால்பூர் இடையே, கலிங்கப்பட்டினம் அருகே கரையை கடக்கக்கூடும்.மேலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப்பகுதியிலிருந்து சுமார் 7.6 கிலோமீட்டர் உயரம் வரை, மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் வழியாக தாய்லாந்து வளைகுடா வரை காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இன்று முதல் 29-ந் தேதி வரை மழை
இன்று (23-09-2026): மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மற்ற தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.நாளை (24-09-2026): மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.மற்ற தமிழக பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
25 மற்றும் 26-09-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.புதுச்சேரியிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.
மற்ற தமிழக பகுதிகள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.27-09-2026: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம்.28 மற்றும் 29-09-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுச்சேரியிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற தமிழக பகுதிகள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலையில் பெரிய மாற்றம் இல்லை
செப்டம்பர் 23 முதல் 25-ந் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது. இயல்பான அளவை ஒட்டியே வெப்பநிலை நிலவக்கூடும்.செப்டம்பர் 26 மற்றும் 27-ந் தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றாலும், ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சென்னையில் மாலை நேர மழைக்கு வாய்ப்பு
இன்று (23-09-2026): சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கலாம்.
நாளை (24-09-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
கடலுக்கு செல்ல வேண்டாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை
23 மற்றும் 24-09-2026: வட தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.25 முதல் 27-09-2026 வரை: வட தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீச வாய்ப்புள்ளது.
மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் செப்டம்பர் 24-ந் தேதி மாலை வரை மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 75 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். அதன் பின்னர் காற்றின் வேகம் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது.அந்தமான் கடல் மற்றும் இதர வங்கக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா மற்றும் ஏனாம் கடலோரப் பகுதிகளில் செப்டம்பர் 24-ந் தேதி மாலை வரை மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீச வாய்ப்புள்ளது.மேலும், வடக்கு மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் செப்டம்பர் 24-ந் தேதி வரை மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.
செப்டம்பர் 25-ந் தேதி வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.செப்டம்பர் 26 மற்றும் 27-ந் தேதிகளில் ஆந்திர கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடலின் பெரும்பாலான பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீச வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 23 மற்றும் 24-ந் தேதிகளில் கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.செப்டம்பர் 25 முதல் 27-ந் தேதி வரை அரபிக்கடல் பகுதிகளுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.பலத்த காற்று வீசக்கூடிய பகுதிகளில் ஆழ்கடல் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், ஏற்கனவே கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.