கூகுள் பே மூலம் ஆன்லைனில் கைமாறிய லஞ்சம்...? அவிநாசி நகராட்சியில் சிக்கிய கணக்கில் வராத ரூ.6.5 லட்சம்...!
Bribes exchanged online through Google Pay Unaccounted 6point5 lakhs caught Avinashi Municipality
திருப்பூர் அவிநாசி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ.6 லட்சத்து 53 ஆயிரத்து 767 பணப் பரிவர்த்தனைகளை கண்டறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில், ஆய்வாளர் சசிலேகா உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் அவிநாசி நகராட்சி அலுவலகத்துக்குள் திடீரென நுழைந்தனர்.

அதிகாரிகள் சோதனையை தொடங்கியதும், நகராட்சி அலுவலகத்தின் இரு பிரதான நுழைவு வாயில்களும் உடனடியாக பூட்டப்பட்டன. அலுவலகத்துக்குள் இருந்தவர்கள் வெளியே செல்லவும், வெளியில் இருந்தவர்கள் உள்ளே வரவும் அனுமதிக்கப்படவில்லை. பலத்த பாதுகாப்புடன் ஒவ்வொரு பகுதியாக தீவிர சோதனை நடத்தப்பட்டது.
அவிநாசி நகராட்சிக்கு தற்போது நிரந்தர ஆணையர் நியமிக்கப்படாத நிலையில், திருமுருகன்பூண்டி நகராட்சி ஆணையர் பாலமுருகன் கூடுதல் பொறுப்பாக பணிகளை கவனித்து வருகிறார்.சோதனை நடைபெற்ற நேரத்தில் நகராட்சி மேலாளர், சுகாதார ஆய்வாளர், எழுத்தர் மற்றும் பொறியாளர்கள் உள்ளிட்டோர் அலுவலகத்தில் பணியில் இருந்தனர்.மாலை 4 மணிக்கு தொடங்கிய சோதனை தொடர்ந்து 7 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.
நீண்ட நேரம் நடைபெற்ற இந்த அதிரடி சோதனை இரவு 11 மணியளவில் நிறைவடைந்தது.சோதனையின்போது நகராட்சி அதிகாரிகளின் செல்போன்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், இணையவழி பணப் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர். குறிப்பாக, கூகுள் பே உள்ளிட்ட ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை முறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிமாற்றங்களும் முழுமையாக ஆராயப்பட்டன.
இந்த ஆய்வில், உரிய கணக்கு விவரங்களில் இடம்பெறாத ரூ.6 லட்சத்து 53 ஆயிரத்து 767 பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றிருப்பது தெரியவந்தது.இதில், நகராட்சி சுகாதார ஆய்வாளர் அரவிந்த் என்பவரின் வங்கிக் கணக்கில் ரூ.5 லட்சத்து 53 ஆயிரத்து 767-ம், நகராட்சி மேலாளர் செல்வகுமார் என்பவரின் கணக்கில் ரூ.1 லட்சமும் இணையவழியில் பெறப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.இந்தப் பணம் தொடர்பாக உரிய ஆவணங்களையோ, முறையான விளக்கத்தையோ சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் அளிக்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, நகராட்சி சுகாதார ஆய்வாளர் அரவிந்த் மற்றும் மேலாளர் செல்வகுமார் ஆகிய இருவர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.மேலும், சோதனையின்போது சந்தேகத்துக்குரிய வகையில் காணப்பட்ட 11 முக்கிய ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர். அந்த ஆவணங்களில் இடம்பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.
நகராட்சி அலுவலகத்தின் கதவுகளை பூட்டி, பல மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் இணையவழி பணப் பரிவர்த்தனைகள் மூலம் லஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படும் விவரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.நேரடியாக பணம் பெறும் முறைகளைத் தாண்டி, இணையவழி பணப் பரிமாற்றங்களும் லஞ்சப் புகார்களில் முக்கிய ஆதாரமாக மாறி வருவதை வெளிப்படுத்தும் வகையில் இந்த சம்பவம் அமைந்துள்ளது. இதனால் அவிநாசி நகராட்சி அலுவலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
Bribes exchanged online through Google Pay Unaccounted 6point5 lakhs caught Avinashi Municipality