கல்வி என்பது தனிப்பட்ட முன்னேற்றத்திற்கு மட்டுமல்ல... சமூக மாற்றத்திற்கும் தேச வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும்...! - குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை
Education not only personal progress it should be used social change and national development President Draupadi Murmu speech
கல்வி என்பது தனி மனிதனின் வாழ்க்கையை உயர்த்துவதற்கான கருவியாக மட்டுமின்றி, சமூகத்தின் முன்னேற்றத்துக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் பயன்பட வேண்டியது அவசியம் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள மகாராஜா சாயாஜிராவ் பரோடா பல்கலைக்கழகத்தின் 75-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.

பின்னர் விழாவில் மாணவர்களிடையே அவர் உரையாற்றியதாவது,"மாணவர்களாகிய நீங்கள் பெற்றுள்ள கல்வியை உங்களது தனிப்பட்ட முன்னேற்றத்திற்கும், குடும்பத்தின் வளர்ச்சிக்கும் மட்டுமே பயன்படுத்தாமல், அதன் மூலம் சமூகத்துக்கும் பொதுநலனுக்கும் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை சிந்திக்க வேண்டும்.நீங்கள் மேற்கொள்ளும் பணிகளில் தேசத்தின் நலனுக்கும், சமூகத்தின் நலனுக்கும் எப்போதும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அவ்வாறு செயல்பட்டால், நாட்டின் வளர்ச்சியுடன் உங்களது வாழ்க்கையும் முன்னேறும்.அத்தகைய முன்னேற்றம் பொருளாதார பலனை மட்டுமின்றி ஆழமான மனநிறைவையும் வழங்கும். அப்போதுதான் கல்வியின் உண்மையான நோக்கத்தையும் அதன் மதிப்பையும் நீங்கள் உணர முடியும்.நீங்கள் பொறியாளராக உருவெடுத்தால், மக்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்களை உருவாக்குங்கள்.
மருத்துவராக மாறினால், மருத்துவத்தை வெறும் தொழிலாக பார்க்காமல், மனிதர்களுக்கு ஆற்றும் சேவையாக கருதுங்கள்.சேவை மனப்பான்மையில்தான் மனிதநேயமும் அமைதியும் அடங்கியுள்ளன. பிறருக்கு உதவுவதன் மூலம் கிடைக்கும் மனநிறைவு அளவிட முடியாதது.
வாழ்க்கையை நடத்துவதற்கு பணமும் வளங்களும் அவசியம்தான். ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கையின் முழுமையான இலக்காக இருக்கக்கூடாது. பிறருக்காக சேவை செய்வதிலும், சமூகத்திற்கு பயனுள்ள பணிகளை மேற்கொள்வதிலும்தான் உண்மையான மனநிறைவு கிடைக்கிறது.
அறிவியலாளர்கள் மனிதகுலம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தங்களது ஆராய்ச்சிகளை முன்னெடுக்க வேண்டும்.அதேபோல், கலைஞர்களும் எழுத்தாளர்களும் தங்களது படைப்புகள் மற்றும் கலை வடிவங்கள் மூலம் சமூகத்தின் உணர்வுகளையும் பண்பாட்டையும் மேலும் செழுமைப்படுத்த வேண்டும்.
கல்வி அறிவை மட்டும் வழங்காமல், சமூகத்தின் மீது அக்கறை கொண்ட பொறுப்பான மனிதர்களை உருவாக்கும்போதுதான் அதன் முழுமையான பயன் வெளிப்படும்” என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
English Summary
Education not only personal progress it should be used social change and national development President Draupadi Murmu speech