கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல்நிலை எப்படி உள்ளது...? - மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்த முதல்வர்...!
Kolathur MLA VS Babu health condition Chief Minister visited hospital person and inquired about his well being
சென்னை கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலை குறித்து நேரில் கேட்டறிவதற்காக முதல்-அமைச்சர் விஜய் சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு சென்றார்.அங்கு மருத்துவர்களை சந்தித்த முதல்-அமைச்சர் விஜய், வி.எஸ். பாபுவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை மற்றும் அவரது தற்போதைய உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவுக்கு கடந்த செப்டம்பர் 9-ந் தேதி அதிகாலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.இதையடுத்து அவரது குடும்பத்தினர் உடனடியாக சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவினர் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
சிகிச்சைக்கு அவரது உடல் நல்ல முறையில் ஒத்துழைத்து வருவதாகவும், மருத்துவ அளவீடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.வி.எஸ். பாபு தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில், அவரது உடல்நிலை குறித்து முதலமைச்சர் விஜய் தொலைபேசி வாயிலாகவும் ஏற்கனவே விசாரித்திருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், மருத்துவமனைக்கு நேரில் சென்ற விஜய், மருத்துவக் குழுவினரிடம் வி.எஸ். பாபுவின் உடல்நிலை, அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை மற்றும் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.
மருத்துவமனை வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, வி.எஸ். பாபுவின் உடல்நிலை சீராக இருப்பதுடன், சிகிச்சைக்கு அவர் நல்ல முறையில் ஒத்துழைத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Kolathur MLA VS Babu health condition Chief Minister visited hospital person and inquired about his well being