பொதுமக்களுக்கு அறிவிப்பு: வருகிற 29-ஆம் தேதி முதல் ஜூன் 02-ஆம் தேதி வரை கடும் வெப்ப அலை வீசும்..? ஒன்றிய அரசு விளக்கம்..!
A severe heat wave will blow from the 29th to June 2nd Union government explanation
வரும் 05 நாட்களில் நாடு முழுவதும் கடும் வெப்ப அலை வீசும் என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்த தகவலுக்கு ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் சில நாட்களாக அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது.
அத்துடன், பீகார், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் உள்பட வடமாநிலங்களில் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் வருகிற 29-ஆம் தேதி முதல் ஜூன் 02-ஆம் தேதி வரை வெயில் 113 டிகிரி முதல் 131 டிகிரி வரை கொளுத்தும் என்றும் அந்த நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 03 மணி வரை யாரும் வெளியே செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்று செய்திகள் வெளியாகி இருந்தன.

இதனை மேற்கோள்காட்டி பொதுமக்களுக்கு ஒன்றிய அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் இந்த தகவல்கள் தீயாய் பரவியது. அதில், வெயிலில் சென்று நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால் உடனடியாக டாக்டரிடம் சிகிச்சை பெறவேண்டும் என்றும், வீடுகளில் கதவு, ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும் என்றும், அதிக வெப்பத்தால் செல்போன்கள் வெடிக்க வாய்ப்பு இருப்பதால் அதன் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்றும், தயிர், மோர், பழச்சாறு உள்ளிட்ட பானங்களை அதிகம் பருக வேண்டும் எனவும், காஸ் சிலிண்டர்களை வெயில் படும்படி வைக்க வேண்டாம் என்றும் பைக், கார் உள்ளிட்ட வாகனங்களில் எரிபொருள் முழுவதுமாக நிரப்பி வைக்க வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த தகவலை பலரும் பகிர்ந்து வந்தனர். ஆனால் இந்த தகவல் குறித்து ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான பத்திரிகை தகவல் அலுவலக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், இதுபோன்ற தகவல்களை ஒன்றிய அரசு வெளியிடவில்லை என்றும், ஆதாரமற்ற செய்திகளை யாரும் நம்பவேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
English Summary
A severe heat wave will blow from the 29th to June 2nd Union government explanation