எட்டயபுரம் அருகே பட்டாசு ஆலை தீ விபத்து: உரிமையாளர் உடல் கருகி பரிதமாக பலி..!
Firecracker factory owner dies in a fire near Ettayapuram
எட்டயபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி அதன் உரிமையாளர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே விஸ்வநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி (57). திமுக மாநில பொதுக்குழு உறுப்பினராகவுள்ளார்.
இவர் சிவகாசி, சாத்தூர், விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் 05-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளை நடத்தி வருகிறார். இந்நிலையில், எட்டயபுரம் அருகே கருப்பூரில் உறவினர் கண்ணபிரான் நடத்தி வரும் பட்டாசு ஆலையை கந்தசாமி குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார். அக்டோபர் 20-ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்காக கருப்பூர் ஆலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவ தினமான நேற்று கந்தசாமி தனது அறையில் இருந்துள்ள போது மாலை 03 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்த தொழிலாளர்கள் தப்பி ஓடியுள்ளனர். ஆனால், கந்தசாமி வெளியே ஓடி வந்த போது ஆலையை சுற்றி அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியில் சிக்கி விழுந்ததில் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்து தீயணைப்பு நிலையங்களிலிருந்து வீரர்கள் வந்து தீயை அணைத்துள்ளனர். அதற்குள் 04-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. மேலும் அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் பட்டாசு ஆலை கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன.
ஆலையின் அருகே இருந்த கோழிப்பண்ணை செட் முற்றிலும் கருகி சேதமடைந்த நிலையில், அங்கு நிறுத்தியிருந்த ஒரு கார், 2 ஜீப் மற்றும் இருசக்கர வாகனங்களும் சேதமடைந்த்துள்ளன. இந்த பட்டாசு ஆலை விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Firecracker factory owner dies in a fire near Ettayapuram