வாட்ஸ்அப்பில் அடுத்த மாஸ் அப்டேட்...! - இனி குறிப்பிட்ட நேரத்திற்கு 'மெசேஜ் ஷெட்யூல்' செய்யலாம்...!
next mass update WhatsApp Now you schedule messages specific time
வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு பயனளிக்கும் வகையில், குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், காணொலிகள் மற்றும் இணையதள இணைப்புகளைத் தேவையான நேரத்தில் தானாக அனுப்பும் புதிய வசதியை அறிமுகப்படுத்துவதற்கான சோதனையில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த வசதி நடைமுறைக்கு வந்தால், பயனர்கள் தாங்கள் அனுப்ப வேண்டிய செய்திகளை முன்கூட்டியே தயாரித்து, அவை சென்றடைய வேண்டிய நாள் மற்றும் நேரத்தையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
தற்போது, குறிப்பிட்ட நேரத்தில் குறுஞ்செய்திகளைத் தானாக அனுப்பும் வசதி சில ஆண்ட்ராய்டு கைப்பேசி பயனர்களுக்குச் சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தச் சோதனை வெற்றியடைந்தால், விரைவில் மற்ற பயனர்களுக்கும் இவ்வசதி விரிவுபடுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புதிய வசதியின் மூலம், பயனர்கள் குறுஞ்செய்திகள் மட்டுமின்றி, இணையதள இணைப்புகள், புகைப்படங்கள் மற்றும் காணொலிகளையும் முன்கூட்டியே அனுப்புவதற்குத் திட்டமிடலாம். இதற்காகச் செய்தி அனுப்ப வேண்டிய தேதி மற்றும் நேரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.கிடைத்துள்ள தகவல்களின்படி, குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் இரண்டு வாரங்கள் வரை முன்கூட்டியே செய்திகளைத் திட்டமிட முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தேர்ந்தெடுத்த நேரம் வந்ததும், பயனர்கள் மீண்டும் கைப்பேசியைத் திறந்து செய்தியை அனுப்ப வேண்டிய அவசியமின்றி, அது தானாகவே அனுப்பப்படும் வகையில் இந்த வசதி உருவாக்கப்பட்டு வருகிறது.கைப்பேசியில் இணைய இணைப்பு இல்லாத நேரத்திலும் திட்டமிட்ட செய்திகள் அனுப்பப்படுவதற்கான வசதியை உருவாக்குவது குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இந்தச் செயல்பாடு எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது தொடர்பான முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.தனிப்பட்ட உரையாடல்களுக்கு மட்டுமின்றி, வாட்ஸ்அப் குழுக்களிலும் திட்டமிட்ட நேரத்தில் செய்திகளை அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஏற்கெனவே திட்டமிடப்பட்ட செய்திகளைப் பார்ப்பதற்கும், அவற்றில் மாற்றம் செய்வதற்கும் அல்லது தேவையில்லாத செய்திகளை நீக்குவதற்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.குறிப்பாக, பிறந்தநாள் வாழ்த்துகள், முக்கிய நிகழ்வுகள் குறித்த நினைவூட்டல்கள், அலுவலகத் தகவல்கள் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் அனுப்ப வேண்டிய செய்திகள் போன்றவற்றுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அவசரத்தில் செய்தி அனுப்ப மறந்துவிடுபவர்களுக்கும் இது உதவியாக அமையும்.தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சில பயனர்களிடம் மட்டுமே இந்த வசதி சோதனை செய்யப்பட்டு வருகிறது. அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதி எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை. சோதனைகள் நிறைவடைந்து, செயல்பாடு உறுதிப்படுத்தப்பட்ட பிறகே இதன் அறிமுகம் குறித்த தெளிவான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
next mass update WhatsApp Now you schedule messages specific time