சென்னை ஐகோர்ட்டுக்கு மேலும் 2 புதிய நீதிபதிகள் நியமனம்...! - ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு, முதல்வர் விஜய் வாழ்த்து...!
2 more new judges appointed Chennai High Court President Draupadi Murmu orders Chief Minister Vijay congratulates
சென்னை ஐகோர்ட்டில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களில் இரண்டை நிரப்பும் வகையில், புதிதாக 2 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறப்பித்துள்ளார்.சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி உள்பட மொத்தம் 75 நீதிபதிகள் பணியாற்றுவதற்கான இடங்கள் உள்ளன.
இதில், தற்போது தலைமை நீதிபதியுடன் சேர்த்து 66 நீதிபதிகள் பணியில் உள்ளனர். இதனால், 9 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருந்தன.இந்த நிலையில், சென்னை தொழிலாளர் நல நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதியாகப் பணியாற்றி வந்த டி. லிங்கேஸ்வரன், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பு வகித்து வந்த பி. கார்த்திகேயன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டின் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இருவருக்கும் விரைவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.சென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கூடுதல் நீதிபதிகளான தர்மலிங்கம் லிங்கேஸ்வரன், பாலதண்டாயுதம் கார்த்திகேயன் ஆகியோருக்குத் தமிழக முதல்-அமைச்சர் விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது,"சென்னை ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதிகளாகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தர்மலிங்கம் லிங்கேஸ்வரன், பாலதண்டாயுதம் கார்த்திகேயன் ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீதியின் மாண்பையும், அரசியலமைப்பின் உயரிய விழுமியங்களையும் பாதுகாக்கும் வகையில், நீதித்துறையின் சிறந்த மரபுகளையும் கண்ணியத்தையும் கொண்ட சென்னை ஐகோர்ட்டில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ள உங்கள் இருவரின் நீதிப்பணி சிறப்பாக அமையட்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
English Summary
2 more new judges appointed Chennai High Court President Draupadi Murmu orders Chief Minister Vijay congratulates