புகை வந்த சில நொடிகளில் கொழுந்துவிட்டு எரிந்த பேருந்து...! ஓட்டுநரின் அதிரடி நடவடிக்கையால் நூலிழையில் தப்பிய 40 பயணிகள்...!
bus burst into flames within seconds smoke 40 passengers narrowly escaped thanks driver quick action
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் நோக்கி நேற்று மாலை அரசு நகரப் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. மாலை 4.30 மணிக்கு புறப்பட்ட அந்தப் பேருந்தில் 40-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.குரும்பூர் அருகே நல்லூர் ரெயில்வே கேட் பகுதியில் உள்ள தற்காலிக மாற்றுச் சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநர் இருக்கைக்கு அருகே திடீரென கரும்புகை வெளியேறியது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் தவசிமுத்து, உடனடியாகப் பேருந்தைச் சாலையோரத்தில் நிறுத்தினார். பின்னர், பேருந்தின் இரு தானியங்கி கதவுகளையும் திறந்து, பயணிகள் அனைவரையும் விரைந்து கீழே இறங்குமாறு எச்சரித்தார்.ஓடும் பேருந்தில் இருந்து திடீரென புகை வெளியேறியதால் பதற்றமடைந்த பயணிகள், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அவசரமாகப் பேருந்தில் இருந்து இறங்கினர்.
பயணிகள் அனைவரும் வெளியேறிய சில நொடிகளிலேயே பேருந்தில் தீ மளமளவெனப் பரவி, கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.பேருந்து தீப்பற்றி எரிவது குறித்து தகவல் கிடைத்ததும், திருச்செந்தூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், தீயின் தாக்கத்தால் பேருந்து முற்றிலும் எரிந்து உருக்குலைந்தது.
அதன் உடற்பகுதி எலும்புக்கூடு போலக் காட்சியளித்தது.ஓடும் பேருந்தில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில், ஓட்டுநரின் சமயோசித நடவடிக்கையால் 40-க்கும் மேற்பட்ட பயணிகளும் உடனடியாக வெளியேறி உயிர் தப்பினர். பேருந்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகத் தீப்பற்றியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
bus burst into flames within seconds smoke 40 passengers narrowly escaped thanks driver quick action