ஜெயிலர் 2 பாடலில் ரகசியம் வைத்த விக்னேஷ் சிவன்! படம் வெளியான பிறகுதான் நெல்சனுக்கே தெரியுமாம்!
Vignesh Shivan has kept a secret in a Jailer 2 song Apparently even Nelson will only find out about it after the film's release
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம், அக்டோபர் 15-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்தின் பாடல்கள் குறித்த தகவல்களும் கவனம் பெற்று வருகின்றன. இந்தச் சூழலில், ஜெயிலர் 2 படத்துக்காகத் தான் எழுதிய பாடலில் ஒரு ரகசியத்தை வைத்திருப்பதாக இயக்குநரும் பாடலாசிரியருமான விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் சிறப்புத் தோற்றங்களில் இடம்பெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. முன்னதாக வெளியான 'அல்ல போலலோ' பாடலும் கவனம் பெற்றுள்ளது. படத்தில் மொத்தம் 12 பாடல்கள் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாடலாசிரியர் சூப்பர் சுப்பு ஆறு பாடல்களை எழுதியுள்ளதாகவும், விக்னேஷ் சிவன் ஒரு பாடலை எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற 'ரத்தமாரே' பாடலை எழுதிய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட விக்னேஷ் சிவன், தனது மகன்களின் பெயர்களை அந்தப் பாடலில் இடையிடையே மறைமுகமாக இணைத்திருந்ததாகத் தெரிவித்துள்ளார். முதலில் இயக்குநர் நெல்சன் அதைக் கவனிக்கவில்லை என்றும், பின்னர் அந்த விஷயத்தைக் கண்டுபிடித்தபோது தன்னைத் திட்டியதாகவும் அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். நண்பர் என்பதால் அவரை மன்னித்துவிட்டதாகவும் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
தற்போது ஜெயிலர் 2 படத்திற்காகவும் அதே பாணியில் ஒரு பாடலை எழுதியிருப்பதாக அவர் கூறியுள்ளார். ஆனால், இந்த முறை பாடலில் என்ன ரகசியத்தை வைத்திருக்கிறார் என்பதை நெல்சனால் முன்கூட்டியே கண்டுபிடிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். படம் வெளியான பிறகுதான் அந்த ரகசியத்தைத் தானே வெளிப்படுத்தப் போவதாகவும் அவர் கூறியிருப்பது ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
இதுகுறித்துப் பேசும்போது, அயன் திரைப்படத்தில் இடம்பெறும் பிரபலமான வசனத்தை மாற்றிக் குறிப்பிட்டு, “லட்டுல வச்சேன்னு நினைச்சியா தாஸ்... நட்டுல வச்சேன்” என்று நெல்சனை மேடையிலேயே விக்னேஷ் சிவன் கிண்டலடித்ததாகக் கூறப்படுகிறது. அவரது இந்த நகைச்சுவைப் பேச்சு நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே ரத்தமாரே பாடலில் தனது மகன்களின் பெயர்களை மறைமுகமாக இணைத்ததாக விக்னேஷ் சிவன் தெரிவித்திருந்த நிலையில், ஜெயிலர் 2 பாடலிலும் அவர் என்ன ரகசியத்தை வைத்திருக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. படம் வெளியான பிறகுதான் அந்த விவரம் தெரியவரும் என்பதால், பாடலில் மறைந்திருக்கும் சுவாரஸ்யமான விஷயத்தை அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
English Summary
Vignesh Shivan has kept a secret in a Jailer 2 song Apparently even Nelson will only find out about it after the film's release