சென்னைவாசிகளுக்கு இனி 'தண்ணீர் தட்டுப்பாடு' இல்லை...! - ரூ.3,108 கோடியில் 98 கி.மீ 'ரிங் மெயின்' திட்டத்துக்கு இன்று முதல்வர் விஜய் அடிக்கல்...! - Seithipunal
Seithipunal


சென்னை மக்களின் குடிநீர்த் தேவையை தடையின்றிப் பூர்த்தி செய்வதற்கும், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் பகுதிகளுக்கு மாற்றுப் பகுதிகளில் இருந்து குடிநீரைக் கொண்டு செல்வதற்கும் புதிய திட்டத்தைச் செயல்படுத்த சென்னை குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக, நகரின் பல்வேறு குடிநீர் ஆதாரங்களை ஒன்றோடொன்று இணைக்கும் வகையில், 98 கிலோமீட்டர் தொலைவுக்குப் பிரதான சுற்றுக்குழாய்கள் அமைக்கப்பட உள்ளன.

சென்னையில் ஏரிகள், நிலத்தடி நீர் ஆதாரங்கள் மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் மூலம் பெறப்படும் தண்ணீரை மக்களுக்கு சீராக விநியோகிப்பதற்கான கட்டமைப்பை வலுப்படுத்த இந்தத் திட்டம் உதவும். இதன் மூலம், 84 குடிநீர் விநியோக நிலையங்களையும் பிரதான குழாய்கள் வழியாக இணைத்து, நாளொன்றுக்கு 120 கோடி லிட்டர் குடிநீரை விநியோகிக்கத் தேவையான வசதிகள் உருவாக்கப்பட உள்ளன.

குறிப்பாக, ஏதேனும் ஒரு பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டால், தண்ணீர் தேவையைச் சமாளிக்கும் வகையில் மற்றொரு பகுதியில் இருந்து பாதிக்கப்பட்ட பகுதிக்குக் குடிநீரைக் கொண்டு செல்ல முடியும். இதற்காகச் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் 'பிரதான சுற்றுக்குழாய் திட்டம்' செயல்படுத்தப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், நாளொன்றுக்கு 40 கோடி லிட்டர் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்ட 9 முக்கிய குடிநீர் ஆதாரங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட உள்ளன. குடிநீரை எடுத்துச் செல்லும் உந்து நிலையங்கள் மற்றும் விநியோகக் குழாய்களும் இத்திட்டத்தில் இடம்பெறுகின்றன.

மொத்தம் 98 கிலோமீட்டர் தொலைவுக்குத் துருப்பிடிக்காத எஃகுக் குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. இதன் மூலம் குடிநீர் விநியோகக் கட்டமைப்பை ஒருங்கிணைத்து, தேவைக்கேற்ப பல்வேறு பகுதிகளுக்குத் தண்ணீரை விரைவாகக் கொண்டு செல்ல வழிவகை ஏற்படும்.ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன், ரூ.3,108 கோடி மதிப்பீட்டில் இந்தப் பிரம்மாண்டத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

சென்னையில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்துவதுடன், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் மாற்று வழியில் குடிநீரை விநியோகிப்பதற்கும் இத்திட்டம் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டத்திற்குத் தமிழக முதல்-அமைச்சர் விஜய் இன்று அடிக்கல் நாட்டித் தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான அடிக்கல் நாட்டு விழா, சோழிங்கநல்லூரில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai residents no longer face water shortage Chief Minister Vijay lays foundation stone 98 km Ring Main project worth 3108 crore today


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->