கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி...! - நீண்ட வரிசையில் காத்திருக்கும் சிரமம் நீங்குகிறது, இந்து சமய அறநிலையத்துறை அதிரடி அறிவிப்பு...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் முக்கியக் கோவில்களுக்குச் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் இனி செல்போன்களைத் தங்களுடன் எடுத்துச் செல்லலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. கோவில்களுக்குள் செல்போன்களைக் கொண்டு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றைப் பயன்படுத்திப் புகைப்படம் எடுப்பது, காணொலி பதிவு செய்வது, தன்படம் எடுப்பது ஆகியவற்றுக்கான கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில், திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில், மதுரை அழகர் கோவில் உள்ளிட்ட தமிழகத்தின் 52 கோவில்களுக்குள் பக்தர்கள் செல்போன் எடுத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்திருந்தது.

கடந்த செப்டம்பர் 1-ந் தேதி முதல் இந்தக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால், கோவிலுக்கு வந்த பக்தர்கள் தங்களது செல்போன்களை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் பெட்டகங்களில் ஒப்படைத்துவிட்டுச் சாமி தரிசனம் செய்ய வேண்டியிருந்தது.

செல்போன்களைப் பாதுகாப்புப் பெட்டகங்களில் ஒப்படைப்பதற்கும், தரிசனம் முடிந்த பிறகு அவற்றைத் திரும்பப் பெறுவதற்கும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. குறிப்பாக, விழாக்காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும்போது, இந்த நடைமுறை கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, செல்போன் தடையை நீக்க வேண்டும் அல்லது தளர்த்த வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். செல்போன்களைப் பாதுகாப்பாகப் பராமரிப்பதிலும், அவற்றை ஒப்படைத்துப் பெற்றுக்கொள்வதிலும் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்களையும் அதிகாரிகள் கவனத்தில் கொண்டனர்.

இதுதொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது இந்தத் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.புதிய அறிவிப்பின்படி, பக்தர்கள் தங்களது செல்போன்களை கோவில்களுக்குள் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கோவிலுக்குள் நுழைவதற்கு முன்பாக செல்போன்களை முழுமையாக அணைத்துவிட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

செல்போனைக் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டாலும், கோவில் சிலைகள், பூஜைகள் மற்றும் வழிபாட்டு நிகழ்வுகளைப் புகைப்படம் எடுப்பதற்கும், காணொலியாகப் பதிவு செய்வதற்கும் தடை தொடர்கிறது. அதேபோல், தன்படம் எடுப்பது மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிர்வதற்காகக் கோவில் வளாகத்தில் காட்சிகளைப் பதிவு செய்வதும் அனுமதிக்கப்படாது.

கோவில்களின் புனிதத்தன்மையையும் வழிபாட்டு ஒழுங்கையும் பாதுகாக்கும் நோக்கில், புகைப்படம் மற்றும் காணொலி பதிவு செய்வதற்கான கட்டுப்பாடுகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. விதிமுறைகளை மீறிச் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

செல்போன்களைப் பாதுகாப்புப் பெட்டகங்களில் ஒப்படைத்துவிட்டுத் திரும்பப் பெறுவதற்காகக் காத்திருக்கும் சிரமம் குறையும் என்பதால், இந்தத் தளர்வு பக்தர்களுக்கு நிம்மதியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cell phones allowed inside temples hassle waiting long queues eliminated Hindu Religious and Endowments Department made bold announcement


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->