ஏஐ வளர்ச்சி ஐடி வேலைகளுக்கு சவாலாக மாறும்: ‘கோடிங் தெரிந்தவர்களே சீக்கிரமே வேறு வேலையை பார்த்து கொள்ளணும் – ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை - Seithipunal
Seithipunal


ஏஐ தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வரும் சூழலில், ஐடி துறையில் பணிபுரியும் பலர் எதிர்காலத்தில் வேறு வேலைகளைப் பார்க்க வேண்டிய நிலை உருவாகலாம் என ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை விடுத்துள்ளார். மனிதர்களை விடவும் ஏஐ மிகச் சிறப்பாக கோடிங் எழுதத் தொடங்கிவிட்டதாகவும், இது ஐடி ஊழியர்களுக்கு ஒரு முக்கிய திருப்புமுனை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளில் ஏஐ தொழில்நுட்பம் அபார வளர்ச்சி கண்டுள்ளது. பல துறைகளில் செயல்திறன் உயர்ந்தாலும், அதே நேரத்தில் வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சமும் அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் கோடிக்கணக்கான இளைஞர்கள் நம்பி இருக்கும் ஐடி துறையில், ஏஐ காரணமாக பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்ற விவாதம் தீவிரமாகி வருகிறது.

இந்த நிலையில், Zoho நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, ஏஐ தொடர்பாக சில முக்கிய கருத்துகளை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். எந்தவித கோடிங் அனுபவமும் இல்லாமல் ஒருவர் ஏஐ உதவியுடன் ‘பகவத் கீதை’ செயலியை உருவாக்கியதாக ஒரு நெட்டிசன் பதிவிட்டிருந்த நிலையில், அதற்கு பதிலளித்த வேம்பு, “கோடிங் எழுதும் ஐடி வல்லுநர்களான நாம், விரைவில் மாற்று வழிகளைப் பற்றி யோசிக்க வேண்டிய நிலை வரும்” என்று கூறியுள்ளார்.

அவர் தனது பதிவில், Anthropic நிறுவனத்தின் Claude ஏஐ மூலம் ஒரு முழுமையான C கம்பைலர் உருவாக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார். “இது சாதாரண விஷயம் அல்ல. இந்த கட்டத்தில், கோடிங் எழுதும் அனைவரும் – என்னையும் சேர்த்தே – வேறு வழிகளை பரிசீலிப்பது நல்லது. இதை நான் பீதியுடன் சொல்லவில்லை; முழுமையாக ஏற்றுக்கொண்டு அமைதியாகச் சொல்கிறேன்” என அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும், ஏஐ புரட்சிக்குப் பிறகு உலக பொருளாதாரம் எப்படி மாறும் என்பது குறித்து Google-ன் Gemini சாட்பாட்டுடன் விரிவான உரையாடல் நடத்தியதாகவும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். அந்த உரையாடல், ஒரு புத்திசாலித்தனமான பொருளாதார தத்துவ அறிஞருடன் விவாதிப்பது போல இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். “என் சொந்த வேலையை விமர்சிக்கும்படி கேட்டேன்; அதையும் கூட ஏஐ மிகச் சிறப்பாகச் செய்தது” என்றும் அவர் பகிர்ந்துள்ளார்.

ஏஐ எதிர்காலம் இரண்டு பாதைகளில் செல்லலாம் என்றும் ஸ்ரீதர் வேம்பு எச்சரித்துள்ளார். ஏஐ யார் கைகளில் இருக்கும், யார் அதைக் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதே முடிவை தீர்மானிக்கும் என அவர் கூறினார். நல்லபடியாக வளர்ந்தால், தொழில்நுட்பம் மனித வாழ்க்கையின் ஒரு சிறிய பகுதியாக மாறி, மக்கள் குடும்பம், இயற்கை, மண், நீர், கலை, இசை, கலாச்சாரம் மற்றும் விளையாட்டு போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தும் நேரம் கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆனால், நேர்மாறாக ஏஐ ஒரே நபர் அல்லது சிலரின் கட்டுப்பாட்டில் குவிந்தால், அது ஒரு இருண்ட உலகை உருவாக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். ஸ்ரீதர் வேம்புவின் இந்த கருத்துகள், ஏஐ வளர்ச்சியின் நன்மை–பாதகங்களை சமநிலையாக சிந்திக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறுத்துவதாக பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AI development will become a challenge for IT jobs Those who know coding should look for other jobs soon Sridhar Vembu warns


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->