2028 இலக்கு! சந்திரயான்-4, சந்திரயான்-5 திட்டங்களை ஒரே நேரத்தில் முன்னெடுக்கிறது இஸ்ரோ...!
2028 target ISRO simultaneously pursuing Chandrayaan 4 and Chandrayaan 5 projects
இந்தியா தனது விண்வெளி பயணத்தில் இன்னொரு வரலாற்றுச் சுவடுக்கு தைரியமாக காலடி எடுத்து வைக்கிறது. சந்திரயான்–3 திட்டத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பின், சந்திரயான்–4 மூலம் நிலவின் மேற்பரப்பில் இருந்து மண் மற்றும் கற்களை நேரடியாக பூமிக்குக் கொண்டு வரும் முக்கிய முயற்சிக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தீவிரமாக தயாராகி வருகிறது.
இந்த ambitious திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதுடன், ரூ.2,104 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.சந்திரயான்–4 திட்டத்தின் கீழ் நிலவுக்குச் செல்லும் கருவிகள், எல்.வி.எம்–3 மற்றும் பி.எஸ்.எல்.வி என இரண்டு ராக்கெட்டுகள் மூலம் தனித்தனியாக விண்ணில் செலுத்தப்பட உள்ளன.

இதன் மூலம் நிலவில் இருந்து மாதிரிகளை சேகரித்து பூமிக்குக் கொண்டு வருவது இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லாக அமையவுள்ளது. அதேபோல், சந்திரயான்–5 திட்டம் ஜப்பான் நாட்டுடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இஸ்ரோ செயல்படுத்தவுள்ள சந்திரயான்–4 மற்றும் சந்திரயான்–5 ஆகிய இரண்டு முக்கிய நிலவு திட்டங்களுக்கும் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒப்புதல் கிடைத்துள்ளது. 2028 ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு இந்த இரு நிலவு பயணங்களும் திட்டமிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறுகையில், “சந்திரயான்–4, சந்திரயான்–5 ஆகிய திட்டங்களுக்கு அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளது. 2028 க்குள் இவை விண்ணில் ஏவப்பட உள்ளன. விண்வெளி தொழில்நுட்பத்தை பேரிடர் மேலாண்மை, விவசாயம் மற்றும் தேசிய வளர்ச்சித் துறைகளில் மேலும் விரிவுபடுத்துவது எங்களின் முக்கிய நோக்கமாக உள்ளது.
குறிப்பாக பேரிடர் எச்சரிக்கை மற்றும் சேதத்தை குறைப்பது இஸ்ரோ பணிகளில் முக்கிய இடம் பிடித்துள்ளது” என்றார்.மேலும், இந்திய அரசின் வேளாண் துறை மற்றும் பல்வேறு விவசாய பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, விண்வெளி தொழில்நுட்பத்தின் மூலம் விவசாய உற்பத்தியை மேம்படுத்த இஸ்ரோ தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது குறைந்தது 9 முக்கிய பயிர்களின் மகசூல் முன்னறிவிப்பை இஸ்ரோ செய்து வருகிறது. அதோடு வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை கண்காணித்து, முன்கூட்டியே எச்சரிக்கை அறிவிப்புகளை வழங்குவதிலும் இஸ்ரோ முக்கிய பங்கு வகித்து வருகிறது.
நிலவுக்குச் செல்லும் பயணங்களோடு மட்டுமல்லாமல், பூமியில் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் முயற்சிகளிலும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் புதிய உயரங்களை நோக்கி பயணித்து வருகிறது.
English Summary
2028 target ISRO simultaneously pursuing Chandrayaan 4 and Chandrayaan 5 projects