'இளைஞர்களின் எழுச்சியை அடக்க முடியாது'...! மோடி, அமித் ஷா மீது ராகுல் காந்தி கடும் தாக்கு... அமித் ஷா பதவி விலகவும் வலியுறுத்தல்...!
Youth uprising cannot be suppressed Rahul Gandhi attacks Modi Amit Shah Demands Amit Shah resign
இந்திய இளைஞர்களின் போராட்டத்தை ஒடுக்க அரசு அதிகாரத்தை பயன்படுத்தியதாக குற்றம்சாட்டியுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இளைஞர்களின் கேள்விகளுக்கும், அவர்களின் போராட்டங்களுக்கும் அரசு பொறுப்புடன் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது காவலர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி, மத்திய அரசின் செயல்பாடுகளை ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இது தொடர்பாக தனியார் ஆங்கில நாளிதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
கடந்த ஜூலை 20-ந் தேதி நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். நியாயமான கல்வி முறை, தேர்வு முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி, வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் குரல் எழுப்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.
சாதி, மதம், வர்க்கம், பிராந்தியம் என எந்த வேறுபாடும் இல்லாமல் பல்வேறு தரப்பைச் சேர்ந்த இளைஞர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதாகவும், அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகளை நிலைநாட்டும் நோக்கத்துடன் அவர்கள் அமைதியான முறையில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியதாகவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் குரலைக் கட்டுப்படுத்த அரசு தரப்பில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டதாகவும், லத்திகளால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ரப்பர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பீகார் மாநிலம் சிவான் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் பலர் காயமடைந்ததாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்திற்கு அருகிலேயே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றிருப்பது மிகவும் கவலைக்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட காவலர்கள் மற்றும் விரைவு நடவடிக்கை படையினர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.மாணவர்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நடவடிக்கைக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அனுமதி அளித்திருந்தால், அதற்கான முழுப் பொறுப்பையும் அவர் ஏற்க வேண்டும் என்றும், இதுகுறித்து அவருக்கு எதுவும் தெரியாது என்றால் அது அவரது நிர்வாகத் திறன் குறித்த கேள்வியை எழுப்புவதாகவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
எந்த சூழ்நிலையிலும் உள்துறை அமைச்சராக இந்த விவகாரத்துக்கு அமித்ஷா பொறுப்பேற்க வேண்டும் என்றும், இதன் காரணமாக அவர் பதவி விலக வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.தங்களது சட்டப்பூர்வ உரிமைகளை பயன்படுத்தி கேள்வி எழுப்பிய இளைஞர்களை பிரதமர் மோடி மன்னிப்பதாக கூறியிருப்பது முரண்பாடான அணுகுமுறை என்றும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
அரசிடம் விளக்கம் கேட்கும் மக்களை மன்னிக்கும் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இளைஞர்கள் அரசியல் மற்றும் நிர்வாக விவகாரங்களில் விழிப்புணர்வுடன் செயல்படத் தொடங்கியுள்ளதாகவும், அவர்களின் கேள்விகளை அதிகாரத்தின் மூலம் அடக்க முடியாது என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரதமர் மோடியின் அரசியல் செல்வாக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுவிட்டதாகவும், அதனை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவது சாத்தியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட எந்த அதிகாரியாக இருந்தாலும் தங்களது செயல்களுக்கு உரிய விளைவுகளை எதிர்கொள்ளாமல் தப்பிக்க இந்திய இளைஞர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
English Summary
Youth uprising cannot be suppressed Rahul Gandhi attacks Modi Amit Shah Demands Amit Shah resign