மனைவி பயத்தால் வந்த வினை...! மண்ணில் புதைத்து வைத்த ரூ.5 லட்சத்தை மொத்தமாக பதம் பார்த்த கரையான்...! கதறி அழுத விவசாயி...! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தானில் விவசாயி ஒருவர் தனது மனைவிக்கே தெரியாமல் நிலத்துக்குள் ரகசியமாக புதைத்து வைத்திருந்த ரூ.5 லட்சம் பணம், ஓராண்டுக்குப் பிறகு கிடைத்தபோது அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்து மண்ணுக்குள் பதுக்கி வைத்த பணத்தை கரையான்கள் கடித்து சேதப்படுத்தியிருந்ததால், கையில் பணம் கிடைத்தும் அதை பயன்படுத்த முடியாத பரிதாப நிலைக்கு விவசாயி தள்ளப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டம் பச்பத்ரா பகுதியைச் சேர்ந்தவர் மங்கிலால் மேக்வால். விவசாயியான இவர், கடந்த ஆண்டு தனது நிலத்தை ரூ.5 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளார். அந்தப் பணத்தை கொண்டு நிலத்தில் புதிய அறை ஒன்றை கட்டுவதற்கு திட்டமிட்டிருந்தார்.

ஆனால், அந்தப் பணத்தை வீட்டில் வைத்திருந்தால் செலவாகிவிடும் என நினைத்த மங்கிலால், மனைவிக்குத் தெரியாமல் பணத்தை பாலித்தீன் பையில் சுற்றி, தனது விவசாய நிலத்தில் குழி தோண்டி புதைத்து வைத்துள்ளார். பின்னர் அந்த இடத்தை அடையாளம் காண முடியாமல் மறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

சில காலத்துக்குப் பிறகு அறை கட்டுவதற்காக பணம் தேவைப்பட்டபோது, மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த ரூ.5 லட்சம் பணம் மங்கிலாலுக்கு நினைவுக்கு வந்துள்ளது.உடனே பணத்தை புதைத்து வைத்த இடத்தை தேடத் தொடங்கியுள்ளார். ஆனால், சரியான இடம் நினைவில் இல்லாததால், தனது சுமார் 6 ஏக்கர் விவசாய நிலத்திலும் பல இடங்களில் தேடியுள்ளார்.

மண்ணை தோண்டியும் பணம் கிடைக்காததால் அவரது தேடல் நீண்ட நாட்களாக தொடர்ந்துள்ளது.ஒரு கட்டத்தில் பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்த அவர், நடந்த விஷயத்தை தனது மனைவி மற்றும் மகனிடம் தெரிவித்துள்ளார். முதலில் அவர்கள் நம்ப மறுத்தாலும், பின்னர் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து நிலம் முழுவதும் பணத்தை தேடியுள்ளனர்.

இந்நிலையில், மழைக்காலம் தொடங்கியதால் விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்காக நிலத்தை உழ முடிவு செய்துள்ளனர். இதற்காக உழவு இயந்திரம் மூலம் நிலத்தை உழுது கொண்டிருந்தபோது, மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த சில பொருட்கள் மேலே வந்துள்ளன.அவற்றை எடுத்துப் பார்த்தபோது, நீண்ட நாட்களாக தேடி வந்த ரூ.5 லட்சம் பணம் என்பது தெரியவந்துள்ளது.ஆனால், பணம் கிடைத்த மகிழ்ச்சி சில நிமிடங்களிலேயே அதிர்ச்சியாக மாறியது.

மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த ரூ.500 நோட்டுகளை கரையான்கள் கடித்து சேதப்படுத்தியிருந்தன. பல நோட்டுகள் கிழிந்து, சிதைந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டன.பல மாதங்களாக தேடிய பணம் இறுதியாக கிடைத்தபோதும், அது கரையான்களால் சேதமடைந்திருந்ததால் மங்கிலாலும் அவரது குடும்பத்தினரும் பெரும் வேதனை அடைந்தனர்.

சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் நம்பிக்கையில் அவற்றை பச்பத்ராவில் உள்ள வங்கிக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால், அந்த நோட்டுகளை அங்கு மாற்றித் தர முடியாது என்று வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.மேலும், சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் தொடர்பாக ஜெய்ப்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தை அணுகுமாறு வங்கி தரப்பில் அறிவுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு வருடத்துக்கும் மேலாக மண்ணுக்குள் மறைந்திருந்த பணத்தை எப்படியாவது மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த மங்கிலால், அது கரையான்களால் முற்றிலும் சேதமடைந்திருப்பதை பார்த்து கண்ணீர்விட்டுள்ளார்.சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை கையில் வைத்தபடி அவர் வேதனையுடன் அழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

வீட்டில் வைத்திருந்தால் பாதுகாப்பாக இருக்கும் என நினைத்து, மனைவிக்குக்கூட தெரியாமல் நிலத்துக்குள் பதுக்கி வைத்த ரூ.5 லட்சம் பணம், ஓராண்டுக்குப் பிறகு கிடைத்தபோது கரையான்களால் சிதைக்கப்பட்டிருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

wife act of fear Termites devoured entire 5 lakh buried soil farmer cried


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->