நாமக்கல்லில் மீண்டும் பரபரப்பு! பர்கர் சாப்பிட்ட 9 பேருக்கு வாந்தி, மயக்கம்! ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!
Youth admitted to hospital after eating burger in Namakkal
நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த நிலையில் தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அனைத்து உணவகங்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மிஸ்டர் பர்கர் என்ற தனியார் உணவகத்தில் பர்கர் சாப்பிட்ட 9 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

அவர்கள் அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை அடுத்து நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் 8 பேருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் வீடு திரும்பினர். ஆனால் நாமக்கல் பூங்கா நகரை சேர்ந்த 18 வயது இளைஞருக்கு உடல் நலக்குறைவு அதிகமானதால் அவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது அவர் உடல் நலத்துடன் இருப்பதாக அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து நேற்று மதியம் உணவகத்திற்கு நேரடியாக சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்த போது பல தரமற்ற உணவுப் பொருட்களை பறிமுதல் செய்தோடு அந்த உணவகத்திற்கு ரூ.1,000 அபராதம் விதித்துள்ளனர்.
ஏற்கனவே நாமக்கல்லில் உள்ள தனியார் உணவகத்தில் சவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழந்தோடு 53 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது பர்கர் சாப்பிட்டவர்களுக்கும் மருத்துவமனையில் அனுமதியானது மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Youth admitted to hospital after eating burger in Namakkal