சென்னை மற்றும் பெங்களூரு இடையேயான அதிவேக புல்லட் ரயில் திட்டப் பணிகள் தொடக்கம்..!
Work on the high speed bullet train project between Chennai and Bengaluru begins
சென்னை மற்றும் பெங்களூரு இடையேயான அதிவேக புல்லட் ரயில் திட்டப் பணிகளுக்கான முதற்கட்ட வடிவமைப்புப் பணிகளைத் தேசிய அதிவேக ரயில் கழகம் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் மூலம், சென்னை - பெங்களூரு இடையேயான பயண நேரம் வெறும் 01 மணி நேரம் 15 நிமிடங்களாகக் குறையும். தென்னிந்திய பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானதாக பார்க்கப்படும் இத்திட்டத்திற்காக மொத்தம் 16 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் 306 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த அதிவேக ரயில் பாதையில், மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் புல்லட் ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்திற்காக, கர்நாடக மாநிலத்தில் மட்டும் சுமார் 1358.96 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது.

இதற்கான ஆரம்பகட்ட நில அளவை மற்றும் சர்வே பணிகள் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் தற்போது முழுவீச்சில் நடைபெற தொடங்கியுள்ளன.
இத்திட்டத்தின் படி, தரைவழிப் பாதை பெங்களூரு பையப்பனஹள்ளி முனையத்தில் தொடங்கி ஒயிட்ஃபீல்டு, ஹோஸ்கோட்டே, கோலார், சித்தூர், பரந்தூர், பூந்தமல்லி வழியாக சென்னை சென்ட்ரல் நிலையத்தை வந்தடையும். இதில் சென்னை சென்ட்ரல், பையப்பனஹள்ளி மற்றும் ஒயிட்ஃபீல்டு ஆகிய 03 முக்கிய ரயில் நிலையங்களும் பூமிக்கு அடியில் பிரம்மாண்டமாக அமையவுள்ளன.
மாநிலங்களின் சுற்றுச்சூழல் மற்றும் புவியியல் அமைப்பைக் கருத்தில் கொண்டு, சித்தூர் மொகிலி கணவாய் வழியாகச் செல்லும் 14.7 கிலோமீட்டர் தூரம் உட்பட மொத்தம் 34.6 கிலோமீட்டர் தூரத்திற்குச் சுரங்கப் பாதைகள் அமைக்கப்படவுள்ளன. இந்த அதிவேக ரயில் பாதையின் மொத்த நீளத்தில் கர்நாடகாவில் 101 கிலோமீட்டரும், ஆந்திராவில் 72 கிலோமீட்டரும், தமிழ்நாட்டில் 133 கிலோமீட்டரும் அமையவுள்ளன.
English Summary
Work on the high speed bullet train project between Chennai and Bengaluru begins