''ஜெயலலிதா ஆசியோடு தவெகவில் இணைகிறேன்; இன்னும் வலிமையாக மண்ணுக்கான மக்களுக்கான என் வாழ்நாள் பயணம் என்றும் தொடரும்''; சி. விஜயபாஸ்கர் அறிவிப்பு..!
C Vijayabaskar announces that he will join the TVK with the blessings of Jayalalithaa
தமிழக அரசியலில் நாளுக்கு நாள் பரபரப்புக்கு பஞ்சமில்லை. முன்னதாக அதிமுகவில் இருந்து நான்கு எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்துள்ளனர். இந்நிலையில், அதிமுகவின் முக்கிய புள்ளிகளான சி. விஜயபாஸ்கரும், எம்.ஆர். விஜயபாஸ்கரும் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து அடுத்த அதிர்ச்சியை கொடுத்தனர்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் விரைவில் தவெகவில் இணைவார்கள் என தகவல்கள் வெளியான நிலையில், சி. விஜயபாஸ்கர் நாளை தவெகவில், தான் இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;
''புரட்சித்தலைவி அம்மா எனும் பேராளுமையின் அரசியல் இலட்சியங்களால் தொடங்கிய என் பொதுவாழ்வுப் பயணம், 35 ஆண்டுகளாக, நம் மண்ணின், மக்களின் அன்பை மூலதனமாகவும், அவர்களின் நம்பிக்கையை வழித்துணையாகவும் கொண்டு ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், நம்ம_விராலிமலை தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்ற வேட்பாளராகவும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் பணியாற்றும் அரிய வாய்ப்பைப் பெற்றேன்.
இன்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நம்பிக்கையாக, மக்கள் விரும்பும் மாற்றத்தின் அடையாளமாக, தனது மவுனப் புன்னகையால் கோடிக்கணக்கான இதயங்களை வென்று, வளமான தமிழகத்தின் எதிர்கால அரசியலுக்குப் புதிய திசையை உருவாக்கி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயின் தலைமையை ஏற்று, புரட்சித்தலைவி அம்மாவின் ஆசியோடும், புதுக்கோட்டை மாவட்ட மக்களின் பேரன்போடும், நம்ம விராலிமலை மக்களின் பேராதரவோடும், நாளை (ஜூலை 2) தமிழக வெற்றிக் கழகத்தில் என்னை முழுமையாக இணைத்துக் கொள்கிறேன். நேற்று போலவே இன்று இன்னும் உறுதியாக நாளை இன்னும் வலிமையாக மண்ணுக்கான மக்களுக்கான என் வாழ்நாள் பயணம் என்றும் தொடரும்'' எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
C Vijayabaskar announces that he will join the TVK with the blessings of Jayalalithaa