பெண்ணிடம் கைப்பை பறிப்பு... தப்பிச் சென்ற 2 கல்லூரி மாணவர்களை வளைத்துப் பிடித்த காவலர்கள்...!
Woman handbag snatched Cops corner 2 college students who escaped
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பட்டப்பகலில் பெண்ணிடம் கைப்பையை பறித்துச் சென்றதாக கூறப்படும் இரு கல்லூரி மாணவர்களை காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.குளித்தலை அருகே தென்கடை குறிச்சி பகுதியைச் சேர்ந்த ராமதுரையின் மனைவி அம்பிகா, 34. இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மாவட்ட மகளிர் அணி செயலாளராக உள்ளார்.

நேற்று முன்தினம் மதியம் அம்பிகா தனது இருசக்கர வாகனத்தில், தெற்கு மாடு விழுந்தான் பாறை பகுதியைச் சேர்ந்த காமாட்சி, 37, என்பவரை உடன் அழைத்துக்கொண்டு வீட்டில் இருந்து குளித்தலை நகரை நோக்கி புறப்பட்டார். இருவரும் கரூர்–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
குளித்தலையில் உள்ள தனியார் பள்ளி மேம்பாலத்தின் அருகே, சேவைச் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அம்பிகாவின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனை எதிர்பாராத அம்பிகா உடனடியாக சுதாரித்துக்கொண்டு சற்று நகர்ந்ததால், தங்கச்சங்கிலியை பறிக்க முடியாமல் போனது. அதே நேரத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பின்னால் அமர்ந்திருந்த காமாட்சியின் கையில் இருந்த கைப்பையை திடீரென பறித்துக்கொண்டு வேகமாக தப்பிச்சென்றனர்.
பறிக்கப்பட்ட கைப்பையில் ரூ.1,000 ரொக்கம், ஏ.டி.எம். அட்டை, பான் அட்டை மற்றும் 2 செல்போன்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அம்பிகாவும் காமாட்சியும் உடனடியாக குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவாகியிருந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில், சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மகன் முகேஷ், 19, என்பவர் டிப்ளமோ படித்து வருவது தெரியவந்தது. அவருடன் மூர்த்தியின் மகன் புவனேஷ், 19, என்பவரும் சம்பவத்தில் தொடர்புடையவர் என தெரியவந்தது.
புவனேஷ் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.இருவரையும் காவலர்கள் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பட்டப்பகலில் நடந்த கைப்பை பறிப்பு சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு காவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Woman handbag snatched Cops corner 2 college students who escaped