கார் வேண்டாம்... அரசுக்கு செலவு வைக்கமாட்டோம்...! - உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு
No car We will not spend government Udhayanidhi Stalin sensational announcement
தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில், விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் விஜய் 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில், பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மற்றும் முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் தடையின்றி மக்கள் பணியாற்றுவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தும் வகையில், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அரசு வழங்கும் வாகனத்துக்கான ஓட்டுநர் ஊதியம், எரிபொருள், வாகன பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் வாகனப் படியாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், அலுவலகப் பணிகளுக்கு உதவியாளரை நியமித்துக்கொள்ள மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் உதவியாளர் படியாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதற்காக சம்பந்தப்பட்ட சட்டங்களில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, உரிய ஆணைகள் வெளியிடப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.அரசு கார் வழங்கும் அறிவிப்பு வெளியான நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
சட்டப்பேரவையில் அவர் பேசுகையில், “தமிழ்நாடு கடன் சுமையில் இருப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார். எனவே, அரசு அறிவித்துள்ள காரை திமுகவை சேர்ந்த 59 சட்டமன்ற உறுப்பினர்களும் பெற்றுக்கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ளோம். முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்ட கோப்பை சட்டப்பேரவையில் சமர்ப்பித்துள்ளேன். அரசின் தேவையற்ற செலவுகளை குறைக்கும் வகையில், பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே அரசு கார் வழங்க வேண்டும்” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
இதேபோல், சி.பி.ஐ. சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு கார் தேவையில்லை என்று எம்.எல்.ஏ. தளி ராமச்சந்திரன் தெரிவித்தார்.“அரசு கார் தேவையில்லை என்பதே எங்களுடைய நிலைப்பாடு” என்று அவர் கூறினார்.
அரசு கார் வழங்கும் திட்டம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்தார்.அவர் பேசுகையில், “அமைச்சர்களுக்கு கார், வீடு, 4 உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன. ஆனால், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அதுபோன்ற வசதிகள் இல்லை.
ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதியில் பல லட்சம் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்க வேண்டிய சூழல் உள்ளது. இதனை கருத்தில் கொண்டுதான் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கப்படுகிறது.எதிர்க்கட்சித் தலைவருக்கு இரண்டு அல்லது மூன்று சொந்த வீடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி இருக்கும்போது அவர் அரசு பங்களாவில் வசிக்கிறார்.
சொந்த வீடு இருக்கும்போது எதற்காக அரசு பங்களா பயன்படுத்தப்படுகிறது என்று கேள்வி எழுப்ப முடியுமா?” என்று ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பினார்.அரசு கார் வழங்கும் திட்டத்தை ஒரு தரப்பினர் வரவேற்றும், மற்றொரு தரப்பினர் அரசின் செலவினத்தை கருத்தில் கொண்டு எதிர்த்தும் கருத்துகளை முன்வைத்ததால், சட்டப்பேரவையில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
No car We will not spend government Udhayanidhi Stalin sensational announcement