தமிழக சட்டசபை தேர்தல் தேதி எப்போது? – வெளியான முக்கிய தகவல்! ஓட்டுப்போட ரெடியா மக்களே?
When is the date of the Tamil Nadu Assembly elections Important information released Are you ready to vote people
தமிழகத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்தச் சூழலில், தேர்தல் அறிவிப்பு தொடர்பாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அதன் தொடர்ச்சியாக, 2021 மே 7ஆம் தேதி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பதவியேற்றார். தற்போது அந்த ஆட்சியின் ஐந்து ஆண்டு காலம் 2026 மே மாதத்தில் நிறைவடைய உள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த சட்டசபைத் தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த முறை தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் நடிகர் விஜய் தலைமையிலான புதிதாக உருவான தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் தேர்தல் களத்தில் நேரடியாக மோத உள்ளன. திமுக தனது தற்போதைய கூட்டணிக் கட்சிகளை தக்கவைக்க முயற்சி செய்து வரும் நிலையில், அதிமுக தரப்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக தலைவர்கள் கூட்டணியை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விஜய் தனது கட்சிக்கான கூட்டணியை அமைக்க முயற்சி செய்து வருகிறார். அதே நேரத்தில், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என சீமான் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்பது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. தகவல்களின்படி, பிப்ரவரி மாத தொடக்கத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்வீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் தமிழகம் வருகை தர உள்ளனர். அவர்கள் தேர்தல் ஆயத்தப் பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து மாநில அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.
இந்த ஆய்வுகள் மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகு, தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி மார்ச் மாத தொடக்கத்தில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போதும் இதே மாதிரியான நடைமுறை பின்பற்றப்பட்டது. அப்போது, மார்ச் தொடக்கத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக 234 சட்டசபைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதேபோன்று, இந்த முறையும் தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் தேதிகள் ஒரே நாளில் அறிவிக்கப்படும் வாய்ப்பு அதிகம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், வரும் மார்ச் மாதம் தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
When is the date of the Tamil Nadu Assembly elections Important information released Are you ready to vote people