மீண்டும் திமுக ஆட்சியா..? வாக்களித்த பின் விஜய் ஆன்டனி செய்தியாளர்களிடம் கூறியது என்ன..?
What did Vijay Antony tell reporters after casting his vote
மொத்தம் 234 தொகுதிகள் கொண்ட தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில், திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், சசிகலா தலைமையிலான கூட்டணி என 05 முனை போட்டி நிலவுகிறது. களத்தில் 4,023 வேட்பாளர்கள் உள்ளனர்.
இன்று மாலை 05 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் 82.24 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி சாலிகிராமத்தில் தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''அரசாங்கத்தை தீர்மானிக்கும் முக்கியமான நாள் இது. நானும் வெளியூரிலிருந்து வந்ததால் நேரமாகிவிட்டது. நிறைய பொதுமக்கள் வந்து வாக்களிப்பதை பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த முறையை விட இந்த முறை வாக்களிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதற்கு காரணம் விழிப்புணர்வு. படித்த மக்கள் அதிகமாகிவிட்டனர். வாக்காளர்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துவிட்டது. வாக்குப்பதிவு அதிகமாகியிருப்பது நல்லது. 05 வருடத்துக்கு ஒருமுறை அரசியலில் ரீ-டேக் எடுக்கலாம். அனைத்து துறைகளும் கடினமானது தான். எதுவும் ஈஸி இல்லை'' என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவரிடம் இந்த தேர்தலில் ரீடேக் வருமா..? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ''வராது சார்.. வராது.. யாராவது ஒருவர் வந்து தானே ஆகணும்'' என கூறியத்தோடு, ''என் வாயில இருந்து எதாச்சும் வர வைக்காதீங்க'' சுத்தகரித்துக்கொண்டு பதிலளித்துள்ளார்.
அதாவது, மீண்டும் திமுக அரசுக்கு ரீ-டேக் இல்லை என்று அவர் கூறியுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
அத்துடன், விஜய் ஆண்டனி தொடந்து கூறுகையில், ''மொத்தமாக நான் கூறுவது, அயல்நாட்டில் போர் உள்ளிட்ட விஷயங்களால் அமைதியின்மை நிலவுகிறது. அந்த வகையில், இந்தியாவில் சில தவறுகள் இருந்தாலும், நாட்டை நன்றாக வைத்துக்கொள்வதில் மக்களுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. எதற்கெடுத்தாலும் ஆட்சியை குறை சொல்வதை விட, மக்களுக்கும் அதில் பங்கு உள்ளது.
அரசியல் செய்வதே மக்கள் தான் என்பது என்னுடைய கருத்து. அயல்நாடுகளை ஒப்பிடும்போது, இந்திய அரசு, மாநில அரசு நல்ல அரசாக தான் இருக்கிறது. இந்த அரசு நல்ல அரசாக தான் இருக்கிறது. எதிர்காலத்தில் வரும் அரசும் நல்ல அரசாக தான் இருக்கும். இந்தியாவை அரசாங்கம் சிறப்பாக தான் கொண்டு செல்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
What did Vijay Antony tell reporters after casting his vote