ஐஆர்எஸ் அதிகாரியின் மகளை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொன்ற வீட்டு வேலைக்காரன்; இன்னொரு பெண்ணிடமும் அத்துமீறல்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
In Delhi a domestic help sexually assaulted and strangled to death the daughter of an IRS officer
தலைநகர் டெல்லியில் ஐஆர்எஸ் மூத்த அதிகாரி ஒருவர், குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரின் 22 வயதான மகள் ஐஐடியில் இளநிலை படிப்பை முடிந்துவிட்டு யுபிஎஸ்சி போட்டித் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்.
வழக்கம் போல அதிகாலையில் ஐஆர்எஸ் அதிகாரி, தனது மனைவியுடன் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று காலை 08 மணியளவில் மீண்டும் இருவரும் வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் கதவுகள் திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர், படுக்கை அறையில் அவர்களின் மகள் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளதை பார்த்து பதறிபோயுள்ளனர்.
உடனடியாக இது குறித்து தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். அப்போது உடற்கூராய்வில் இளம்பெண் கடுமையாக தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.
அத்துடன், குறித்த இளம்பெண்ணை செல்போன் சார்ஜர் வயர் மூலம் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. இதனிடையே, சம்பவ இடத்தில் உள்ள தடயங்களை சேகரித்த போலீசார், சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்துள்ளனர். அதில், காலை 06.28 மணிக்கு இளைஞர் ஒருவர் ஐஆர்எஸ் அதிகாரியின் வீட்டிற்குள் சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர், 07.22-க்கு வேறு உடையை மாற்றிக் கொண்டு வெளியே வந்துள்ளார். தீவிர விசாரணையில் அந்த நபர் ராஜஸ்தான் மாநிலம் அல்வர் பகுதியைச் சேர்ந்த ராகுல் மீனா என தெரியவந்துள்ளது. 19 வயதான இவர் ஐஆர்எஸ் அதிகாரியின் வீட்டில் வேலையாளாக பணியாற்றி வந்துள்ளதாகவும், அத்துடன், உடன் பணியாற்றிய ஊழியர்களிடம் கடன் வாங்கி விட்டு திருப்பிக் கொடுக்காமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இளைஞரை வேலையை விட்டு நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் வீட்டில் ஆள் இல்லாத நேரம் பார்த்து வந்த அவர், அதிகாரியின் மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார், ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து பதுங்கியிருந்த ராகுல் மீனாவை கைது செய்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் செவ்வாய்க்கிழமை அன்று அல்வரில் உள்ள சொந்த கிராமத்தில் திருமணமான பெண் ஒருவரையும் ராகுல் மீனா பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. தனது குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமாக இருந்த பெண்ணிடம் அவர் அத்துமீறிய நிலையில், அதன் பின்னர், நேராக டெல்லிக்கு திரும்பியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தாமதமாகவே குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்து இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த ராகுல் மீனா மீது, கொலை, கொள்ளை உள்ளிட்ட பிரிவுகளிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஐஆர்எஸ் அதிகாரியின் வீட்டில் 04 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால் அதையும் மீறி உள்ளே நுழைந்தவர் 04 கதவுகளை கடந்து இளம்பெண்ணின் படுக்கை அறைக்கு சென்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, ஏற்கனவே அந்த வீட்டில் பணியாற்றியவர் என்பதால் மாற்றுச் சாவிகள் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு எளிதாக உள்ளே நுழைந்துள்ளார். இருந்த போதும் வேலையை வீட்டு தூக்கிய மனக் கசப்பில் தான் அதிகாரியின் மகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
In Delhi a domestic help sexually assaulted and strangled to death the daughter of an IRS officer