இருமொழிக் கொள்கையை கட்டாயமாக்க ஒன்றிணைந்து போராட வேண்டும்..எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தல் ! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையில் தமிழ் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும், புதிய கல்விக் கொள்கை மற்றும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை உடனே கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி அரசுக்கு எதிராக தமிழ் அமைப்புகள் கண்டன‌ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் உரிமை இயக்க தலைவர் பாவாணன் தலைமை வகித்தார். பொருளாளர் சுகுமாறன் வரவேற்று பேசினார். அமைப்புச் செயலாளர் தீனா, துணைத் தலைவர்கள் வீரமணி, வீர மோகன், மல்லிகா சங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தார். முனைவர் தமிழமல்லன், முனைவர் இளங்கோ, முத்துக்கண்ணு ஆகியோர் தொடக்கவுரை ஆற்றிட, தமிழ் உரிமை இயக்க பொதுச்செயலாளர் மங்கையர் செல்வன் நோக்கவுரை ஆற்றினார். தொடர்ந்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள்.
 
ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் பேசியதாவது: –அரசியல் அமைப்பு சட்டத்தின் 8–வது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளை ஊக்குவிக்க வேண்டிய ஒன்றிய அரசு மாறாக, இந்தி, சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளை பாலூட்டி வளர்க்க நினைக்கிறது. இது விநோதமான மொழிக்கொள்கை ஆகும். ஒன்றியத்தில் பாஜக ஆட்சி ஆமைந்ததில் இருந்து அவர்களின் மதவாத அடையாளமாக உள்ள சமஸ்கிருதத்தை சிபிஎஸ்இ பாடத்திட்டம் மூலம் திணிக்கிறது. ஒன்றிய அரசின் மிரட்டலுக்கு தமிழ்நாடு அரசு அடிபணியாமல் இருமொழிக் கொள்கையே தொடரும் என்று அறிவித்து அதில் உறுதியாக இருக்கிறது. ஆனால் ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை படிப்படியாக முழுமையாக கொண்டு வந்துள்ளது. ஆனால் இத்திட்டத்திற்காக ஒன்றிய அரசு ஆண்டுதோறும் வழங்கும் சுமார் 50 கோடி ரூபாய் முறையாக செலவு செய்யப்படுவதில்லை. ஸ்மார்ட் கிளாஸ் ரூம் கட்டினோம். ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தோம், உள்கட்டமைப்பை மேம்படுத்தினோம் என்றெல்லாம் கணக்கு காட்டுகிறார்கள். இத்திட்டத்திற்கு ஒதுக்கப்படும் பணம் நேரடியாக அரசுக்கு வராமல், டிரஸ்ட் மூலம் வடமாநில அதிகாரி ஒருவர் தலைமையில் இத்திட்டம் நிர்வகிக்கப்படுகிறது. அதனால் ஒன்றிய அரசு அனுப்பும் பணம் முறையாக செலவு செய்யப்படாமல் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதை ஊழல் என்றும் சொல்லலாம். இதுகுறித்து புதுச்சேரி அரசிடம் கேட்டால் எந்த பதிலும் இல்லை. 
 
இந்தியாவில் இந்தி பேசும் மாநிலங்களில் இன்னும் ஒரு மொழிக் கொள்கை தான் பின்பற்றப்படுகிறது. ஆனால் 1968–ஆம் ஆண்டு ஜனவரி 23–ஆம் தேதி பேரறிஞர் அண்ணா அவர்கள் பிரகடனப்படுத்திய இருமொழிக் கொள்கை இன்னும் தமிழ்நாட்டில் உறுதியாக பின்பற்றப்படுகிறது. ஆனால் புதுச்சேரியை ஒன்றிய அரசு கேடயமாக பயன்படுத்துகிறது. அதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருக்கிறார்கள். இதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய அமைச்சர்கள் தன்மானம் இல்லாமல் சுயநலத்தோடு உள்ளார்கள். புதுச்சேரி மக்களுக்கான, மொழிக்கான, இனத்திற்கான உரிமைகளை பெறுவதற்கு நாம் தொடர்ந்து போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். புதுச்சேரி மாநிலத்தில் வருங்கால மாணவர்கள் தாய்மொழி வழியில் கல்வி பயில ஏதுவாக 12–ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியை கட்டாயமாக்க செய்ய வேண்டும். அதற்கான போராட்டத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும். புதுச்சேரி மண்ணின் மொழி, இனம், மக்களை காக்க திராவிட முன்னேற்றக் கழகம் முன்னின்று போராடும். இவ்வாறு பேசினார்.
 
முன்னதாக புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையில் தமிழ் பாடத்தைக் கட்டாயமாக்க வேண்டும், புதிய கல்விக் கொள்கை மற்றும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை உடனே கைவிட வேண்டும், புதுச்சேரி மாநிலத்துக்கென்று தனி கல்வி வாரியத்தை உருவாக்கி அதன்மூலம் பாடத்திட்டங்களை வடிவமைப்பு செய்ய வேண்டும், தமிழ் வளர்ச்சிக் கழகத்தை உடனே உருவாக்கிட வேண்டும், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை இழுத்து மூடும் அரசின் முடிவை உடனே கைவிட வேண்டும், கடை மற்றும் வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் பெயர் பலகை, விளம்பரம், ஊர்தி மற்றும் அலுவலகப் பெயர் என அனைத்தையும் தமிழில் முதன்மையான அடையாளமாக அரசாணையின்படி மாற்றி அமைக்க உரிய நடவடிக்கை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் உரிமை இயக்கம் சார்பில், வலியுறுத்தி முழக்கம் இடப்பட்டது. 
                
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இரா. செந்தில்குமார், எல். சம்பத், திமுக அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ். கோபால், பழநி, தொகுதி செயலாளர்கள் ப. வடிவேல், சிவக்குமார், மாணவர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் எஸ்.பி. மணிமாறன், மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் ஆனந்த் ஆரோக்கியராஜ், இளைஞர் அணி துணை அமைப்பாளர் தாமரைக்கண்ணன் மற்றும் தமிழ் அமைப்பினர், தமிழறிஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

We must unite and fight to enforce the bilingual policy Opposition Leader Shivas insistence


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->